இன்றைய மனித சமூகம் பயன்படுத்தும் எந்தப் பொருளுக்கும் வடிவமைப்பு அவசியம்.
அதைத் தொடர்ந்து அதைப் பெருமளவில் உற்பத்தி செய்வதற்கான கருவிகள் மற்றும்
அச்சுவார்ப்பு அவசியம்.
அந்த வகையில், பிளாஸ்டிக், உலோகம், வார்ப்பிரும்பு உள்ளிட்டவற்றில்
இயந்திரங்களின் பாகங்கள், உதிரி பாகங்கள், அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும்
பிளாஸ்டிக் பொருள்களை உருவாக்குவதற்கான தொழில்நுட்பமே டூல் அண்ட் டை மேக்கிங்
படிப்பு (Diploma In Tool and Die Making)
இத்தொழில்நுட்ப டிப்ளமோ 3 ஆண்டு படிப்பாகவும், ஓராண்டு பயிற்சியாகவும்
நாட்டில் ஒரு சில கல்வி நிறுவனங்களால் மட்டுமே அளிக்கப்படுகிறது.
இப்படிப்பை 70 சதவீதம் பயிற்சியாகவும், 30 சதவீதம் பாடமாகவும் அளித்து
வருகிறது என்டிடிஎப் என அழைக்கப்படும் "நெட்டூர் டெக்னிக்கல் டிரைனிங்
ஃபவுண்டேஷன்'. இந்நிறுவனம் 50 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. ஐஎஸ்ஓ 9001:2008
என்ற சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ள இந்த கல்வி நிறுவனம் இந்தோ- சுவிஸ்
ஒத்துழைப்புடன் நாட்டில் 15 இடங்களில் செயல்படுகிறது. இங்கு இளைஞர்களுக்குப்
பயிற்சி அளித்து 100 சதவீத வேலை வாய்ப்பைத் தொடர்ந்து பெற்றுத் தருகிறது.
தமிழகத்தில் வேலூர், கோவை மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் என்டிடிஎப்
பயிற்சி மையங்கள் உள்ளன. இவற்றில் வேலூர் மற்றும் கோவையில் டூல் அண்ட்டை
மேக்கிங் டிப்ளமா படிப்பைப் பயிலலாம். இக்கல்வி நிறுவனத்தில் சேருவதற்கான
கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி. பிளஸ் 2 தேர்ச்சி
பெற்றவர்களும் சேரலாம். அதிகபட்ச வயது 21. விண்ணப்பத்துடன் ரூ.500-க்கான
வரைவோலை இணைத்து பயிற்சி மையத்தில் சேருவதற்கான நுழைவுத் தேர்வில் பங்கேற்க
வேண்டும். அத்தேர்வில் தரவரிசை அடிப்படையில் 3 பிரிவாக மாணவ, மாணவியர் தேர்வு
செய்யப்பட்டு அவர்களுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது.
டூல் அண்ட் டை மேக்கிங் என்ற டிப்ளமா படிப்பில் 6 மாதத்திற்கு ஒரு பருவத்
தேர்வு வீதம் 6 தேர்வுகள் நடத்தப்படும். அதைத் தொடர்ந்து ஓராண்டுக்கு
வேலைவாய்ப்பு வழங்க முன்வரும் நிறுவனத்தில் ஓராண்டு பயிற்சி அளிக்கப்படும்.
அதன் பிறகே சான்றிதழ் வழங்கப்படும். இப்படிப்பில் வேலைவாய்ப்பு உறுதி
செய்யப்படுகிறது. பயிற்சிக்குப் பிறகு அதே நிறுவனத்தில் பணிபுரிய
விரும்பினாலும் பணியைத் தொடரலாம் அல்லது வேறு நிறுவனங்களில் உடனடியாக
வேலைவாய்ப்பு பெற முடியும். நாட்டின் பல முன்னணி தொழிலகங்கள் இக்கல்வி
மையத்தின் படிப்பை அங்கீகரித்து வேலை வாய்ப்பு அளிக்கின்றன.
வெளிநாடுகளிலும் இந்தப் படிப்பை நிறைவு செய்தவர்களுக்கு நல்ல எதிர்காலம்
உள்ளது. 100 சதவீத வேலைவாய்ப்பு உள்ள இப்படிப்புக்கு கல்விக் கட்டணமாக
ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.66 ஆயிரம் செலுத்த வேண்டியிருக்கும். விடுதிக்
கட்டணம் தனி (அதிகபட்சம் 6 மாதத்திற்கு ரூ.21ஆயிரம்). வேலூரில் அமைந்துள்ள
பயிற்சி மையத்தில் ஆண், பெண் இருபாலரும் சேர்த்துக் கொள்ளப்படுவர். இங்கு
ஆண்களுக்கு விடுதி வசதி உண்டு. பெண்களுக்கு கிடையாது. கோவையில் ஆண்களுக்கு
மட்டும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பிற படிப்புகள் இந்நிறுவனம் வேலூர், கோவை மற்றும் தூத்துக்குடியில் உள்ள
மையங்களில் இயந்திரவியலுடன் கூடிய மின்னணுவியல் டிப்ளமாவை (டிப்ளமோ இன்
மெக்கட்ரானிக்ஸ்) வழங்குகிறது. இதுவும் 3 ஆண்டு படிப்பாகும்.
இந்நிறுவனம் நாட்டில் உள்ள பிற மையங்கள் மூலம் 3 ஆண்டு படிப்பாக டிப்ளமோ இன்
எலக்ட்ரானிக்ஸ், டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்,
டிப்ளமோ இன் மேனுஃபேக்சரிங் டெக்னாலஜி, டிப்ளமா இன் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி
ஆகியவற்றையும் வழங்குகிறது. இவை தவிர டிசைன்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்
பாடத்தில் 2 ஆண்டு முதுகலை டிப்ளமா பயிற்சியும், பி.இ. தேர்ச்சி
பெற்றவர்களுக்கு உற்பத்தி மற்றும் பொருள் வடிவமைப்பு முதுநிலை பட்டப்
படிப்பையும் அளிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு www.nttftrg.com இணைய தளத்தைப் பார்வையிடலாம்.
நிறுவனத்தின் தலைமை அலுவலக முகவரி:
என்டிடிஎப், பீன்யா இன்டஸ்ட்ரியல் ஏரியா, 23-24, பகுதி 2,
பெங்களூர்-560 058. தொலைபேசி 080-64509066.
--
Posted By Jai Sankar E to Jai sankar on 6/15/2012 06:37:00 PM
Related Article:
0 கருத்துரைகள்:
Post a Comment