தமிழ்நாட்டில் மோசடி செய்யும் தீயவர்களால் தமிழீழ விடுதலைப்புலிகளின் பெயரை பாவித்து நிதிசேகரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது என தெரியவந்ததுள்ளது . தமிழீழ விடுதலைப்புலிகள் உத்தியோகபூர்வமாக இதுவிடயமாக மறுப்பு தெரிவித்து தமிழக மக்களை விழிப்பாக இருக்கும் வண்ணம் அறிவித்துள்ளார்கள் .
தமிழீழ விடுதலைப் புலிகள் தமது அறிக்கையில் உண்மைகள் அற்ற இப்படியான போலியான செயல்களுக்கு பின்வருமாறு கண்டனம் தெரிவித்துள்ளார்கள் :
அன்பான தமிழ் மக்களே,
எமது விடுதலை அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகளின் பெயரைப் பயன்படுத்தித் தீயவர்கள் சிலராற் தமிழ்நாட்டில் நிதி சேகரிப்பு முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கென எமது விடுதலை அமைப்பின் பெயரிற் போலியான சிட்டைகள் தயாரிக்கப்பட்டு, நிதி சேகரிக்கும்படி தமிழின உணர்வாளர்களிடமும் எமது ஆதரவாளர்களிடமும் கூட அந்தச் சிட்டைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
அது முற்றிலும் மோசடியான, ஏமாற்றும் செயலாகும். மேலும் எமது விடுதலை அமைப்பின் மீது அவதூறு ஏற்படுத்தும் நோக்கம் கொண்ட செயலுமாகும். எமது விடுதலை அமைப்பின் பெயரைப் பயன்படுத்தித் தவறான முயற்சிகள் எவற்றிலும் ஈடுபட வேண்டாம் என அவ்விடயத்துடன் தொடர்புள்ள அனைவரையும் கடுமையாக எச்சரிக்கை செய்கின்றோம்.
எம்மினிய தமிழ்நாட்டு உறவுகளே, அந்த நிதி சேகரிப்பு முயற்சிகளுக்கும் எமது விடுதலை அமைப்புக்கும் எவ்விதத் தொடர்புமில்லை என்பதை உங்களனைவருக்கும் தெளிவாக அறியத்தருகின்றோம். எமது தாயக விடுதலைக்காக, முடியுமான அனைத்து வழிகளிலும் உதவிட வேண்டும் என நினைக்கும், உங்கள் இனவுணர்வுகளைத் தீயோர் வழிநடத்த ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். எமது விடுதலை அமைப்பின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்குள்ள, அது போன்ற தவறான முயற்சிகளை இனங்கண்டு, அவற்றிலிருந்து விலகியிருக்குமாறு உங்களனைவரையும் பணிவன்புடன் வேண்டுகிறோம்.
"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"
தமிழீழ விடுதலைப்புலிகள்
தமிழீழம்.
Related Article:


0 கருத்துரைகள்:
Post a Comment