Friday, 11 January 2013

இறைவன் எங்கும் வியாபித்திருக்கும் பொழுது ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா? பாகம் 1


இறைவன் எங்கும் வியாபித்திருக்கும் பொழுது ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை தரிசிக்க வேண்டுமா? இறைவன் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கின்றார் என்பதிலே எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது.

சூரியனுடைய ஒளிக்கதிர்கள் எல்லா இடங்களிலும் நிறைந்து இருந்தாலும் வெய்யிலிலே ஒரு கடதாசியையோ அல்லது பஞ்சினையோ வைத்தால் அது நன்றாகக் காயுமேயன்றி தீப்பற்றமாட்டாது. ஆனால் அதே வெய்யிலிலே ஒரு சூரியகாந்தக் கண்ணாடியின் கீழ் வைக்கப்படும் கடதாசியோ அல்லது பஞ்சோ தீப்பற்றி எரியும். அதாவது எங்கும் பரந்துள்ள சூரிய ஒளிக்கதிர்களை சூரியகாந்தக் கண்ணாடியானது சேர்த்து ஒன்றாக்கி அனுப்புவது போல எல்லா இடங்களிலும் நிறைந்துள்ள, இறையருளானது மந்திர, யந்திர சக்திகளினாலே சேர்த்து ஒன்றாக திரட்டி ஆலயங்களிலே வைக்கப்பட்டுள்ளது என்றும் எனவே ஆலயங்களிலே சென்று வணங்கும் பொழுது நாம் செய்த ஊழ்வினைகள் யாவும் வெதும்பி அவற்றின் வேகம் குறைந்து போய்விடுமென்றும் வாரியார் சுவாமிகள் குறிப்பிடுகின்றார்.

அத்துடன் ஒரு பசுவின் உடல் முழுவதும் இரத்தம் வியாபித்திருந்தாலும், அந்தப்பசுவின் மடியில்(முலையில்) தான் இரத்ததை பாலாக மாற்றித் தரும் சுரப்புகள் உள்ளன. அதேபோல இறைவன் எங்கும் வியாபித்திருந்தாலும்; ஆலயத்தில் அமையப் பெற்றுள்ள மந்திர, யந்திர, பூசைகளின் சக்திகளினாலே சுரக்கப் பெறும் இறைவனின் கருணையை சுலபமாக பெற முடிகின்றது. பஞ்சபூதங்களுமே இறைவன் தான் என்று கூறுவதன் பொருள் யாது? பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி இதன் பொருள்:- நிலம் —– (சப்தம்,பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்னும் 5 குணங்கள் கொண்டது) நீர் —– (சப்தம், பரிசம், ரூபம், ரசம் என்னும் 4 குணங்கள் கொண்டது) தீ —– (சப்தம்இ பரிசம், ரூபம் என்னும் 3 குணங்கள் கொண்டது) காற்று —– (சப்தம், பரிசம் என்னும் 2 குணங்கள் கொண்டது) ஆகாயம் —– (சப்தம் என்னும் ஒரே குணம் கொண்டது) கடவுள் எங்கும் நிறைந்தவர், எல்லாம் வல்லவர், எல்லாம் அறிபவர் என்பதால் அவர் எங்குமே வியாபித்திருக்கும் பொழுது உருவ வழிபாடு எதற்காக?

 இறைவன் உருவம் இல்லாதவராயினும் நாம் அவரை நினைப்பதற்காகவும் வணங்குவதற்காகவும் உருவவடிவங்களில் சொல்லப்பட்டிருக்கின்றது. யோகிகள், ஞானிகளல்லாத சாதாரண மனிதர்கள் மத்தியிலே அவர்கள் மனங்களில் இறைவனை நிறுத்துவதற்கு உருவவழிபாடு இன்றியமையாததாகும். இப்படியான உருவங்கள் இறைவனின் தன்மைகளைக் குறிப்பவையாக அமைவதால் ஆரம்பத்தில் இறைவனைப்பற்றி அறிந்து கொள்ள உருவவழிபாடு முக்கியமானதாகின்றது. நாம் காணாத இறைவனை, அதைக் கண்ட யோகிகள், ஞானிகள் அது இப்படித்தான் இருக்கு என்று கூறும் போது அதை நம்பியே ஆகவேண்டி உள்ளது. “இறைவன் ஒருவனே” என்று சொல்லப்படும் பொழுது வெவ்வேறு உருவங்களில் சொல்லப்படுவது எவ்வாறு? ஆம். இறைவன் ஒருவரே தான். அவர் வடிவம் முதலியவற்றிற்கு அப்பாற்பட்ட வராயினும், சத்தியினாலே பல்வேறு தொழில்களைச் செய்வதால் அவர் செய்யும் திருத்தொழில்களைப் பொறுத்து வெவ்வேறு பெயர் கொண்டு வெவ்வேறு உருவங்களில் வழிபடுகின்றோம். இதனை வாரியார் சுவாமிகள் மிக அழகாக தங்கம் ஒன்று தானென்றாலும் அது வெவ்வேறு வடிவங்களில் அணிகலன்களாகச் செய்யப்படும் பொழுது வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றதென்று கூறி விளங்கவைப்பார்.

கோவிலினுள்ளே எத்தனை பரிவார மூர்த்திகள் இருந்தாலும் பரம்பொருள் ஒன்றே என்பதை நாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆலய நுளைவாயில்களிலேயே துவார பாலகர்கள் தங்களது சுட்டு விரல்களைக் காட்டி (ஒன்று என்ற பாவனையாக) நிற்கின்றார்கள். அவ்வாறாயின் சிவலிங்கம் எந்த உருவமாகவும் (கை,கால் போன்ற உறுப்புகள் கொண்டில்லாமையினால்) புரிந்து கொள்ள முடியவில்லையே? சிவலிங்கம் என்பது அருவுருவத் திருமேனியென்று சொல்லப்படுகின்றது. அதாவது கால் கைகளுடன் கூடிய உருவமாகவும் இல்லாமல் உருவமே இலையென்று சொல்லுகின்றவாறும் இல்லாமல் இரண்டுமே கலந்து அருவுருவத் திருமேனியாகக் காட்சியளிக்கின்றது. லிங்கம் என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு தமிழில் அடையாளம் என்று பொருள்படும். எனவே சிவனை அடையாளப்படுத்துவதால் சிவலிங்கம் என்று கொள்ளப்படுகின்றது. சிற்ப சாத்திர முறைப்படி சிவலிங்கம் மூன்று பகுதிகளைக் கொண்டதென்றும் அதாவது:- அடிப்பாகம் —– பிரம்ம பாகம் —- பிரம்ம லிங்கம் —-ஆத்ம சோதி நடுப்பாகம் —– விஷ்ணு பாகம் —– விஷ்ணு லிங்கம் —–அருட்சோதி மேல்பாகம் —- சிவன் பாகம் —– சிவலிங்கம் —– சிவசோதி என்றும் சொல்லப்படுகின்றது. எனவே சிவலிங்கத்தை வணங்கினால் மும்மூர்த்திகளையும் வணங்கிய அருள் கிடைக்கும்.

 உருவமாக அமைக்கப்பட்டிருக்கின்ற இறைவனை விக்கிரகம் என்று கூறுவதேன்? விக்கிரகம் = வி + கிரகம் (வி = மேலான, கிரகம் = உறைவிடம்) அதாவது மேலான உறைவிடம் என்னும் பொழுது இறைவன் சிறப்பாக உறையுமிடமென்று பொருள்படும். இவ்வாறு அமைகின்ற விக்கிரகங்கள் கல்லிலே செதுக்கப் பட்டவையாகவும் வேறு சில தாம்பர விக்கிரகமாகவும் அமையக் காரணமென்ன? அதாவது இறைவன் ஒளி மயமானவன். கல்லை ஒன்றுடனொன்று உரசும்பொழுது ஒளி (நெருப்பு) உண்டாவதைக் காணலாம். எனவே தான் அப்படிப்பட்ட கல்லிலே இறைவனது திருவுருவங்கள் செதுக்கப்பட்டு கும்பாபிசேகத்தின் பொழுது கோவில்களிலே பிரதிட்டை செய்யப்படுகிறது. “சொல்லுக் கடங்கான்காண் சொல்லறிந்து நின்றவன்காண் கல்லுள் ளிருந்த கனலொளிபோ னின்றவன்காண்”. என்று பட்டினத்தார்” கூறுகின்றார். அடுத்து உற்சவ மூர்த்திகள் தாம்பர(தாமிர) விக்கிரகங்களாக அமைவதன் காரணமென்னவென்றால், உலோகம் மின்சாரத்தைக் கடத்த வல்லது. எனவே மூலத்தானத்திலிருக்கும் அருள் மின்சாரத்தை வீதியிலே செலுத்தவல்லது தாம்பர மூர்த்திதான் என்று வாரியார் சுவாமிகள் குறிப்பிடுகின்றார். சிற்பியினாலே கல்லிலே வடிக்கப்படும் பொழுதோ அல்லது கோவிலில் பிரதிட்டை செய்யப்பட முன்னரோ ஆச்சாரமற்ற இடங்களில் இந்த விக்கிரகங்களை வைப்பது தவறா?

 கும்பாபிசேகம் நடைபெறும் வரையில் இவ்விக்கிரகங்கள் சாதாரண கல்லாகக் கணிக்கப்படுவதால் தான் அவ்வாறு வைக்கப்படுகின்றது. கும்பாபிசேகத்தையொட்டி இந்த விக்கிரகங்களை சலாதிவாசம் (தண்ணீரில் வைப்பது) தான்யாதிவாசம் (தானியத்தினுள் வைப்பது) செய்து மந்திரங்களாலே யந்திரங்களை எழுதி விக்கிரகத்தின் அடியிலே வைத்து யாகங்கள் செய்து சோதியை வளர்த்து அந்த சோதியைக் கும்பத்துக்குக் கொண்டுபோய் பின்னர் கும்பத்திலேயிருந்து பிம்பத்துக்குக் கொண்டு போவதாகிய கும்பாபிசேக நிகழ்வின் பின்னர் தான் இவ்விக்கிரகங்கள் தெய்வசக்தி பெற்றுவிடுவதால் இறைவன் வாழுமிடமாகக் கருதப்படுகின்றது. புதிதாகக் கட்டப்பட்ட கோவிலுக்கு செய்யப்படுகின்ற கும்பாபிசேகத்தைவிட வேறெந்தச் சந்தர்ப்பங்களிலே கோவில்களில் கும்பாபிசேகம் இடம்பெறுகின்றது? புதியதாகக் கட்டப்பட்ட கோவிலுக்குச் செய்யப்பட்ட கும்பாபிசேகத்தின் பொழுது சாத்தப்பட்ட அட்டபந்தனமானது (மருந்து சாத்துதல்) ஆகக்கூடியது பன்னிரணடு வருடங்கள் வரைதான் பழுதடையாமல் இருக்கும். இவ்வாறு சாத்தப்படுகின்ற அட்ட பந்தனம் பழுதடையும் பொழுது வாலத்தாபனம் செய்யப்பட்டு கும்பாபிசேகம் செய்ய ப்படும். சில சந்தாற்ப்பங்களில் அட்டபந்தனக் கலவை பிழையான அளவுகளில் கலக் கப்பட்டாலோ அல்லது நன்கு இடிக்கப்படாவிட்டாலோ பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னரே பழுதடைய ஆரம்பித்துவிடும்.

இப்படியான சந்தர்ப்பங்களிலேயும் கும்பா பிசேகம் செய்யப்படும். அதைவிட கோவில்களிலே ஏதாவது பாரிய திருத்த வேலைகள் இடம்பெற்றாலும் கும்பாபிசேகம் செய்வது வழக்கம். கருவறையில் உள்ள மூர்த்திக்கு “அஷ்ட பந்தனம்’ சாற்றப்படுவது ஏன்? அதில் என்னென்ன கலந்துள்ளன? விக்ரகங்களை பீடத்தில் ஸ்திரமாக வைக்க, பீடத்துக்கும் விக்ரகத்துக்கும் இடையில் உள்ள பகுதியில் “அஷ்டபந்தனம்’ என்ற கலவையைச் சாற்றுவது வழக்கம். கொம்பரக்கு —– 1 பங்கு குங்குலியம் —– 3 பங்கு காவிக்கல் —– 3 பங்கு வெண்மெழுகு —– 3 பங்கு எருமை வெண்ணெய் —– 3 பங்கு செம்பஞ்சு —– 3 பங்கு சுக்கான்தூள் —–முக்காற் பங்கு சாதிலிங்கம் —– காற்பங்கு ஆகிய எட்டு விதமான பொருட்களை அளவுப்படி கலந்து, இடித்துச் சேர்த்து சூடாக்கி அணிவிப்பது அஷ்டபந்தனமாகும். கும்பாபிஷேகம் செய்வதன் பொருள் என்ன? கும்பாபிஷேகம் செய்யும்போது கும்பத் தீர்த்தத்தில் இறைவனை ஆவாகனம் செய்து, யாகத்தின்மூலம் மந்திரம் ஜெபித்து சக்தியை உருவேற்றி, அந்தக் கும்பத் தீர்த்தத்தை இறை பிம்பத்திலும் கோபுர கலசங்களிலும் அபிஷேகம் செய்வர். கடவுளின் உடலாகக் கும்பத்தையும், அதன் மேல் சுற்றப்பட்ட நூல் 72,000 நாடி நரம்பு களையும், உள்ளே ஊற்றப்பட்ட நீர் ரத்தமாக வும், அதனுள் போடப்பட்ட தங்கம் ஜீவனாகவும், மேலே வைக்கப்பட்ட தேங்காய் தலையாகவும், கும்பத்தின் கீழ் பரப்பப்பட்ட தானியம் ஆசனமாகவும் பாவித்து; வஸ்திரம், சந்தனம், பூக்கள் ஆகியவற்றைக் கொண்டு அலங்காரம் செய்து யாக மேடையில் அமைப்பது வழக்கமாகும்.

சாதாரண கும்பமானது மந்திர சக்தியால் உயர்கலசமாக மாறுகிறது. கும்பாபிஷேகத்தால் ஆலயத்தின் இறைசக்தி பன்மடங்கு பெருகுகிறது. கும்பாபிஷேகம் ஆவர்த்தம், அனுவர்த்தம், புனஸ்வர்த்தம், அந்தரிதம் என நான்கு வகைப் படும். 1. தெய்வ மூர்த்தங்களையும் கோவிலையும் புதிதாக அமைத்து நிர்மாணம் செய்வது ஆவர்த்தம் எனப்படும். 2. கோவிலோ, தெய்வ மூர்த்தங்களோ வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டால், அவற்றை மறுபடி அமைப்பது அனுவர்த்தம் என்று சொல்லப்படும். 3. ஆலயம் பழுதடைந்துவிட்டால் அதற்கு அஷ்டபந்தன மருந்து சாற்றி, மீண்டும் புதுப்பிப்பது புனஸ்வர்த்தம் ஆகும். 4. கள்வர்களால் அபகரிக்கப்பட்ட மூர்த்தி களை மீண்டும் பிரதிஷ்டை செய்வது அந்தரிதம் என்று சொல்லப்படும். கோவில்களிலுள்ள விக்கிரகங்களிற் சில பார்ப்பதற்குப் பயங்கரமாகத் தோற்றமளிப்பதன் காரணமென்ன? இறைவன் எம்மால் அறியப்பட முடியாதவாறு ஊர், பேர், உருவம் குணம்குறிகள் இல்லாதவராக இருந்தாலும் ஆன்மாக்களின் மீது கொண்ட அன்பினால் உருவங்களாகக் காட்சியளிக்கின்றார். இறைவனது திருவுருவங்கள் சாதாரணமாகக் கருணை வடிவானவையே. இருப்பினும் தவறிழைக்கின்ற தீயவர்களை நல்வழிப்படுத்துவதற்காக எடுக்கப்படும் தோற்றங்கள் தான் சற்று பயங்கரமாகத் தோற்றமளிக்கின்றன.

 இறைவன் கருணை உள்ளங் கொண்டவரெனும் பொழுது சிவபெருமான் தனது காலுக்கடியில் ஒருவரை மிதிப்பது போன்ற நிலை எதற்காக? இறைவன் எப்பொழுதுமே கருணையுள்ளங் கொண்டவர்தான்;. இருப்பினும் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டுவதனையே அவர் கொண்ட உக்கிர தோற்றங்கள் வெளிப்படுத்துகின்றன. சிவபெருமானின் காலுக்கடியிலே இருப்பவரின் பெயர் முயல கன் என்பதாகும். சிவபெருமானிடத்திலே கோபங்கொண்ட தாருகா வனத்து ரிசிகள் வேள்வியொன்றை நிகழ்த்தி, அதன் மூலமாக முயலகனையும் பாம்புகள் மிருகங் களையும் தோற்றுவித்து சிவபெருமானைத் தாக்கி அழிக்கும் வண்ணம் ஏவினார்கள். இதையுணர்ந்த சிவபெருமான் தன்மீது ஏவப்பட்ட மிருகங்களில் மானையும் மழுவையும் தனது இரு கரங்களிலும் தாங்கிக் கொண்டாரென்றும் பாம்புகளைத் தனக்கு அணிகலன்களாக்கிக் கொண்டாரென்றும், சிங்கத்தையும் யானையையும் கொன்று அவற்றின் தோல்களை தனது ஆடைகளாக்கிக் கொண்டாரென்றும் முயலகனை தனது காலின் கீழ் வைத்துக் கொண்டாரென்றும் ஆகம விளக்கம் கூறுகின்றது. சில கோவில்களிலே கர்ப்பக்கிரகத்தின் புறச்சுவர்களில் விக்கிரகங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றதே? ஆம். கர்ப்பக்கிரகத்தின் புறச்சுவர்களிலே அமைக்கப்பட்டிருக்கின்ற விக்கிரகங்களிலே தெற்கு நோக்கியிருப்பவர் தட்சிணாமூர்த்தியாகும். இவரை யோக தட்சிணாமூர்த்தி, வீணா தட்சிணாமூரத்தி, ஞான தட்சிணாமூரத்தி, வியாக்கியான தட்சிணாமூரத்தி என்று நான்கு வகையாகக் கூறப்பட்டாலும் பெரும்பாலும் கோவில்களில் வியாக்கியான தட்சிணாமூரத்தியையே காணக் கூடியதாகவுள்ளது. அடுத்து சிவாலயங்களின் பின்புறச் சுவரிலே இருப்பவர் “இலிங் கோற்பவர்”. திருமாலும் பிரம்மனும் சிவபெருமானின் அடிமுடி தேடிச் சென்றதனைக் கூறுகின்ற வடிவம்தான் இலிங்கோற்பவ மூர்த்தியாகும்.

அடுத்து வடக்குப் புறச்சுவரிலே பிரம்மன், துர்க்கை போன்றவர்களுக்கு இடமுண்டு. தெய்வங்களாகிய திருமாலும் பிரம்மாவும் தங்களிலே யார் பெரியவரென்று கொண்ட அகம்பாவம் சரியா னதா ? அகம்பாவம் இருக்கக் கூடாதென்பதை வலியுறுத்தவே இறைவன் இவ்வாறான திருவிளையாடலை நிகழ்த்தினார். அதாவது செல்வத்துக்கு அதிகாரி திருமால் கல்விக்கு அதிகாரி பிரம்மன் எனவே செல்வத்தினாலேயோ அல்லது கல்வியினாலேயோ இறைவனைக் காண முடியாது உண்மையான பக்தியினால் தான் இறைவனைக் காணமுடியுமென்பதை உணர்த்துவதற்காகவே இறைவன் இந்த திருவிளையாடலை நிகழ்த்தினார். தண்டேசுவரர் சந்நிதானத்தை வணங்கும் முறை பற்றியும் வெவ்வேறு கருத்து உண்டா?

 அதாவது கையிலே தட்டி வணங்குவது பற்றி இரு வேறு கருத்துக்கள் கூறுவார்கள். 1) சண்டேசுவர் இறைவனை தியானித்தபடியே நிட்டையிலே இருப்பாரென்றும், அவ்வாறு இருப்பரை நமது கைகளிலே தட்டி விழிக்க வைத்து வணங்குவதாகக் கூறுவார்கள். 2) ஆலயத்தின் உடமைகள் யாவற்றுக்கும் பொறுப்பானவர் சண்டேசுவரர் தானென்றும் அதனாலே ஆலயத்தின் உடமைகளெதனையும் நாம் எடுத்துச் செல்ல வில்லை என்ற பாவனையாகவே எமது கைகளை ஒன்றுடனொன்று தடவி (காலப் போக்கில் கையில் தட்டுவதாகிவிட்டதாகவும்) வணங்குவதாகவும் கூறுவார்கள். எப்படி வணங்கினாலும் சண்டேசுவரர் கருவறைக்கு மிக அண்மையாக கருவறையை நோக்கி இறைவனையே தியானித்துக் கொண்டிருப்பதால் சண்டேசுவரர் சந்நிதானத்துக்கும் கருவறைக்கும் இடையிலே சென்று இடையூறு செய்யாது போனவழியிலேயே திரும்ப வேண்டுமென்று கூறப்படுகிறது. இறை வழிபாட்டுக்கும் நவக்கிரக வழிபாட்டுக்கும் சம்பந்தமுண்டா? கோவிற் கிரியைகளில் சிலசந்தர்ப்பங்களில் நவக்கிரகபூசை முக்கிய இடம்பெறுவதாகவும் புராணங்கள் செவ்வாயை முருகனாகவும், புதனை நாராயணனாகவும் இவ்வாறே ஏனைய கிரகங்களையும் தனித்தனித் தெய்வங்களுடன் தொடர்புபடுத்திக் கூறுவதோடு பெருந்தெய்வங்களே நவக்கிரகவழிபாடு நிகழ்த்தியதாகவும் புராணங்களை மேற்கோள் காட்டிப் பேராசிரியர் கைலாசநாதக் குருக்கள் அவர்கள் கூறியுள்ளார்கள். 

நவக்கிரகங்களுக்குரிய நிவேதனங்கள் எவை? சூரியன் —சூடான சர்க்கரைப் பொங்கல் சந்திரன் — குளிர்ந்த பால் பாயாசம் செவ்வாய் — பொங்கல் புதன் — புளியோதரை குரு —- தயிர்சாதம் சுக்கிரன் —- நெய்ப்பொங்கல் சனி —– எள்ளுசாதம் ராகு —- உளுந்து சாதம் கேது —- அன்னம போன்றவையாகும். தீபாராதனைகள் பல்வேறு தீபங்களாலும், உபசாரங்கள் வெவ்வேறு பொருட்களினாலும்(உதாரணமாக சாமரம், குடை) செய்யப்படுவது பற்றி கூறுவீர்களா? இதன் விளக்கம் மிகவும் பரந்துபட்டதொன்றாகும். இருப்பினும் மிக சுருக்கமாகப் பார்ப்போம்.





Related Article:


பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog