Wednesday 19 June 2013

கக்கன்-105



பரிசுத்தமான மனிதர் கக்கன்.
 பூசாரி கக்கன் என்ற தோட்டிக்கு மகனாகப் பிறந்து, வறுமையில் உழன்று, பெரும்பாடுகளுக்கிடையே பள்ளி இறுதிவகுப்பு வரை படித்து முடித்துப் பொதுவாழ்வில் ஈடுபட்ட வர்.
கக்கன் ஜூன் 18, 1908 ல்,  மதராஸ் ராசதானியாக தமிழகம் இருந்தபொழுது  மதுரை மாவட்ட, மேலூர் தாலுகாவிலுள்ள  தும்பைபட்டி  கிராமத்தில் ஒரு தலித் குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தையார் பெயர் பூசாரி கக்கன், கிராமக் கோயில் அர்ச்சகராக (பூசாரியாக) பணிபுரிந்தவர். தொடக்கக் கல்வியை மேலூரில் பயின்ற அவர் மேல்நிலைப் படிப்பிற்காக  திருமங்கலம் வந்து அங்கே ஓர் அரசு மாணவர் விடுதியில் தங்கிப் படித்தார்.
 
சத்தியமூர்த்தி காமராஜரை தழுவிக் கொண்டதுபோல், மதுரை வைத்தியநாத ஐயர் கக்கனை வளர்ப்பு மகனாக அரவணைத்துக் கொண்டார். மாசுமருவற்ற தோழர் ஜீவாவின் தலைமையில் தான் கக்கனின் திருமணம் நடந்தது. காந்தி 1934-ல் மதுரை வந்தபோது அவருக்குத் தொண்டாற்றும் வாய்ப்பு கக்கனுக்கு வந்து சேர்ந்தது.

காங்கிரஸ் நடத்திய போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்ற கக்கன் 1942 ஆகஸ்ட் புரட்சியின் போது மேலூர் காவல் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டு 5 நாட்கள் கடுமையான கசையடிக்குள்ளானார். சுயநினைவு இழந்தவரை குதிரை வண்டியில் பாதம் வைக்கும் இடத்தில் கிடத்தி, தலையும் கால்களும் தொங்கிய நிலையில் இழுத்துச் சென்றதைப் பார்த்தவர்கள் விழிநீர் சிந்தினர்.
நாட்டு விடுதலைப் போரிலும் கக்கன் தீவிரமாக ஈடுபட்டார்.  வெள்ளையனே  வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற கக்கன், அலிப்பூர் சிறையில்  அடைக்கப்பட்டார். 1946 ல் நடந்த தொகுதிப் பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று  1946 முதல் 1950 வரை உறுப்பினராக பொறுப்பு வகித்தார். கக்கன் இந்தியா நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினராகவும்  1952 முதல் 1957 வரை பொறுப்பு வகித்தார்.
காமராஜருக்கு உண்மையும், நேர்மையும், இளமையும் நிறைந்த கக்கனிடம் பெருமதிப்பிருந்தது. தான் முதலமைச்சராக ராஜாஜிக்கு பின் பொறுப்பேற்றதும், காமராஜர் கக்கனைத் தமிழ்நாடு காங்கிரஸின் தலைவராக்கினார். தமிழ்நாடு கங்கிரஸின் தலைவராகப் பணியாற்றிய தாழ்த்தப்பட்ட இனத்தின் முதல் மனிதர் கக்கன். 1957-ல் காமராஜர் மீண்டும் முதல்வரானதும் கக்கனுக்கு அமைச்சரைவையில் இடம் கொடுத்தார்.

தமிழகத்தில் 10 ஆண்டுகள் தொடர்ந்து அமைச்சராக இருந்த கக்கன் பொதுப்பணி, உள்துறை, விவசாயம், உணவு, மதுவிலக்கு, அரசின நலம், அறநிலையத்துறை போன்ற பல்வேறு இலாக்காக்களை நிர்வாகித்தார். இவருக்குப் பின் எந்த தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த அமைச்சரும் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் உள்துறை, பொதுப் பணித்துறை போன்ற முக்கியமான இலாக்காக்களின் பொறுப்பை ஏற்றதில்லை.
1957 ல் இந்திய தேசிய காங்கிரஸ் மீண்டும் தேர்தலில் வெற்றிபெற்று மதராஸ் மாகாணத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. கக்கன் பொதுப்பணித்துறை (மின்துறை நீங்கலாக), ஹரிஜன நல்வாழ்வு, பழங்குடியினர் நலத்துறை ஆகியத் துறைகளின் அமைச்சராக ஏப். 13, 1957 ல் பொறுப்பேற்று கொண்டார். மார்ச் 13, 1962 முதல் அக்டோபர் 3, 1963 வரை விவசாயத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். ஏப். 24, 1962, முதல் வணிக ஆலோசனைக்குழுவின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். 
அக். 3, 1963. அன்று மாநில உள்துறை அமைச்சராக பொறுப்பேற்று 1967 ல் காங்கிரஸ் தமிழ்நாட்டில் தோற்கும் வரை அப்பொறுப்பிலிருந்தார் .
கக்கன் அமைச்சராகப் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில் மேட்டூர், வைகை அணைகள் கட்டப்பட்டன. 
தலித்துக்களின் வாழ்வு முன்னேற்றத்திற்காக  ஹரிஜன சேவா சங்கம் உருவாக்கப்பட்டது. அவர் விவசாய அமைச்சராக பொறுப்பில் இருந்த காலத்தில் இரண்டு விவசாயப் பல்கலைக் கழகங்கள் மதராஸ் மாகாணத்தில் துவக்கப்பட்டன. 
இவரின் நாட்டுக்காற்றியப் பணிகளைப் பாராட்டி இந்திய அரசு இவரின் உருவப்படம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலையை 1999  ஆண்டு வெளியிட்டு கௌரவப்படுத்தியது.
பத்தாண்டுகள் மிக முக்கியத் துறைகளின் அமைச்சராக இருந்த கக்கன் 1967 - தேர்தலில் தோற்ற பின்பு சொந்தக் கூரை கூட இல்லாத பரம ஏழையாகப் பேருந்தில் நின்றபடி பயணித்தார். 
1967 சட்டமன்றத் தேர்தலில் கக்கன் மேலூர் (தெற்கு) தொகுதி வேட்பாளராக போட்டியிட்டு அவரை எதிர்த்துப் போட்டியிட்ட  திமுக வேட்பாளர் ஒ.பி. ராமனிடம் தோற்றார். இத்தேர்தல் தோல்விக்குப் பின் அரசியலில் இருந்து ஒய்வு பெற்றார்.
விடுதலைப் போராட்டத் தியாகத்துக்காக அவருக்குத் தனியாமங்கலம் என்ற கிராமத்தில் தரப்பட்ட நிலத்தை, வினோபாவின் நிலக்கொடை இயக்கத்தில் ஒப்படைத்தார்.

முடக்கு நோயால் பாதிக்கப்பட்டவர் கோட்டக்கல் சித்த மருத்துவமனையில் சேர்க்கப்படார். மருத்துவமனையில் பணம் செலுத்த முடியாத நிலையில் நோய் தீராமலே அங்கிருந்து விடை பெற்றார்.


மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சாதாரண வகுப்பில் அவர் சிகிச்சை பெற்றபோது, மதுரை முத்துவை நலம் விசாரிக்க வந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., காளிமுத்துவின் மூலம் செய்தியறிந்து கக்கனைபோய்ப் பார்த்தவர் அதிர்ந்து போனார்.


அங்கே உடம்பில் ஒரு துண்டு மட்டும் போர்த்திக் கொண்டு, முக்கால் நிர்வாண நிலையில் இருந்த கக்கனைக் கண்டு கலங்கி நின்ற எம்.ஜி.ஆர். சிறப்பு வார்டுக்கு மாற்ற உத்தரவிட்டபோது, ‘ வேண்டாம் என்று மறுத்து விட்டார். ‘உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும் என்று கேட்ட எம்.ஜி.ஆரிடம், ‘நீங்கள் பார்க்க வந்ததே மகிழ்ச்சி என்று கைகூப்பினார் கக்கன்.


மேலும் மனிதப் புனிதர் கக்கன் நாடாளுமன்ற உறுப்பினாராக இருந்த போதும், தன் மனைவி சொர்ணம் தொடக்கப்பள்ளி ஆசிரியையாகத் தொடர்ந்து பணியாற்றுவதையே விரும்பினார்.
வலிமை மிக்க, அமைச்சராக அவர் வலம் வந்தபோது தன் மகள் கஸ்தூரிபாயை மாநகராட்சிப் பள்ளியில் தான் படிக்கச் செய்தார்.


தன் தம்பி விஸ்வநாதனுக்கு தாழ்த்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர் லயோலா கல்லூரிக்கு அருகில் ஒரு கிரவுண்ட் மனையை ஒதுக்கீடு செய்து அரசாணையை அளித்த செய்தியறிந்த கக்கன், அந்த ஆணையை வாங்கிக் கிழித்தெறிந்தார்.


இன்று அந்த இடம் 50 லட்சத்துக்கு மேல் பெறும். 
எளிமையின் வடிவமாக நேர்மையின் விளக்கமாக நம்மிடையே வாழ்ந்த கக்கன், 1981,  டிச. 23 ல்  மறைந்தார். 
 கக்கன் உடல் கண்ணம்மாபேட்டையில் டிசம்பர் 24, 1981 அன்று எரியூட்டப்பட்டது.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------
suran


Related Article:


பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog