Friday 7 June 2013

சந்திரசேகருக்கு ரூ. 40 கோடிக்கு சொத்து: நடிகை லீனா மரியம் பால் வாக்குமூலம்!

மோசடி நபர் சுகாஷ் சந்திரசேகருக்கு ரூ. 40 கோடிக்கு சொத்து இருப்பதாக நடிகை லீனா மரியம் பால் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அம்பத்தூரில் உள்ள கனரா வங்கியில் சில மாதங்களுக்கு முன்பு ரூ.19 கோடி மோசடி நடந்தது. இந்த வழக்கில் பாலசுப்பிரமணியம் என்பவரும், அவர் மனைவி சித்ராவும் கடந்த மார்ச் மாதம் சென்னை பெருநகர காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இந்த மோசடிக்கு துணை போனதாக அந்த வங்கி மேலாளர் ஜெகதீசன் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில், மோசடி செய்யப்பட்ட ரூ.19 கோடி பணத்தையும், பெங்களூரைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரும், அவருடைய காதலி லீனா மரியம் பாலும் எடுத்துக் கொண்டு தப்பியோடியது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் ஜெயக்குமாரை பற்றி விசாரணை செய்ததில் அவர் உண்மையான பெயர் சுகாஷ் சந்திரசேகர் என்பதும், அவர் கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
சந்திரசேகர் தொழிலதிபர் பாலசுப்பிரமணியத்துக்கு, கர்நாடக அரசிடம் இருந்து ரூ.140 கோடி மதிப்பிலான ஆணுறை தயாரிக்கும் ஒப்பந்ததை வாங்கி தருவதாக சொல்லி இருக்கிறார். அதற்கு கமிஷன் தொகையாக, வங்கியில் முறைகேடு மூலம் பெற்ற ரூ.19 கோடி பணம் சுகாஷ் சந்திரசேகருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல தாம்பரம் சேலையூர் புதிய பூபதிநகரைச் சேர்ந்த ஜவுளி நிறுவன உரிமையாளர் சக்கரவர்த்தியிடம் ரூ. 62 லட்சத்தை சந்திரசேகரும், அவர் காதலி நடிகை லீனா மரியம் பாலும் மோசடி செய்துள்ளனர்.
இதேபோல சக்கரவர்த்தியிடம் சில மாதங்களுக்கு முன்பு செல்போனில் பேசிய லீனா, கர்நாடக அரசின் மருத்துவத்துறை, போக்குவரத்துறை ஊழியர்களுக்கு சீருடைக்குரிய துணிகளை வாங்குவதற்கான ஒப்பந்தம் அவருக்கு கிடைத்திருப்பதாகவும், அதற்கு முன் பணமாக ரூ. 68 லட்சம் வங்கியில் செலுத்த வேண்டும் எனக் கூறினாராம்.
மேலும் அவரிடம், கர்நாடக அரசின் ஊரக வளர்ச்சித்திட்டத்துறை செயலர் ஜெயக்குமார் ஐ.ஏ.எஸ்., என சந்திரசேகர் பேசி, ரூ. 68 லட்சத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ளனர்.
ரூ. 40 கோடிக்கு சொத்து: இந்நிலையில், கடந்த வாரம் லீனா மரியம்பாலை தில்லியில் சென்னை போலீஸார் கைது செய்தனர். லீனா மரியம் பாலை 4 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து, சென்னை குற்றப்பிரிவு போலீஸார் திங்கள்கிழமை முதல் விசாரணை செய்தனர்.
இதில் பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்துள்ளன. சுகாஷ் சந்திரசேகர் மோசடி மூலம் கிடைத்த பணத்தை பேரீட்சம் பழம் வியாபாரத்திலும், வைர நகை வியாபாரத்திலும் முதலீடும் செய்திருப்பதாகவும், அவ்வாறு ரூ. 40 கோடி வரை முதலீடு செய்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளாராம். இதேபோல வேறு சில தொழில்களிலும் அவர் முதலீடு செய்திருப்பதாக மரியம் பால் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.
சந்திரசேகர் மீது பெங்களூரில் 20 மோசடி புகார்களும், தமிழகத்தில் 7 மோசடி புகார்களும், இதில் சென்னையில் மட்டும் 5 புகார்களும் உள்ளதாகவும் மரியம் பால் தெரிவித்தாராம். மேலும் தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பேரன் எனக் கூறி என்னை ஏமாற்றி காதலித்தார். அதேபோல, ஆஸ்திரேலியாவில் எம்.பி.ஏ. படித்துள்ளதாகவும் கூறி சந்திரசேகர் ஏமாற்றிவிட்டார் எனவும் கூறினாராம்.
நன்றி:தினமணி


Related Article:


பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog