Saturday 1 June 2013

மூச்சு முக்கியம் பாஸ்... 'இன்ஹேலர்' எச்சரிக்கை


''நாற்பது மாணவிகள் உள்ள என் வகுப்பில், பதினைந்து பேருக்கும் மேல் இன்ஹேலர் பயன்படுத்துகின்றனர்''- ஒரு கல்லூரிப் பேராசிரியர் அதிர்ச்சி கலந்த வேதனையுடன் சொன்ன வார்த்தை இது. 
கல்லூரிப் பெண்களின் பைகளில் அழகு சாதனங்கள் மட்டும் அல்ல... இன்று 'இன்ஹேலர்’ என்ற ஆஸ்துமா சாதனமும் இருக்கிறது.



''சுற்றுச்சூழல் கடுமையாக மாசடைந்துள்ள இன்றைய காலகட்டத்தில், ஆஸ்துமாப் பிரச்னையால் அவதிப்படுவோரின் எண்ணிக்கை கூடிக்கொண்டேதான் போகிறது. மூச்சுத்திணறலைக் கட்டுப்படுத்த, ஒரு வரப்பிரசாதமாக அமைந்ததுதான் இன்ஹேலர். இந்தப் பிரச்னைக்காக, மாத்திரைகளை உட்கொண்டால், அது ரத்தத்தில் கலந்து, நுரையீரல் சென்றடைவதற்குள் மூச்சிறைப்பு வந்துவிடும். ஆனால், இன்ஹேலரைக் கொண்டு மூச்சை உள்ளே இழுக்கும்போது, அதில் இருந்து வெளிப்படும் 'ஏரோசால்’ நேரடியாக நுரையீரலில் இருக்கும் வாயுக் குழாய்களைத் தளர்த்தி மூச்சுத்திணறலைக் கட்டுப்படுத்தும். இதில் பின்விளைவுகள் இல்லை. ஆனால், சுலபமாக உபயோக்கிக்க முடிகிறது என்பதற்காக இதனைப் பலரும் அடிக்கடி, குறிப்பாக இளம் பருவத்தினர் அதிகமாக உபயோகிக்கின்றனர். இதுவும் தவறுதான்!'' என்கிற ஆஸ்துமா நிபுணர் டாக்டர் ஜரீன் முகம்மது, இன்ஹேலரை எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்பது பற்றிய டிப்ஸ்களை சொன்னார்.

>>இன்ஹேலரை அடிக்கடி பயன்படுத்தும்போது, ஏரோசாலில் உள்ள சால்பியூட்டமால் (Salbutamol) அளவு அதிகமாகி, கை நடுக்கத்தை ஏற்படுத்தும். எனவே, இன்ஹேலர் வாங்கும்போது அது காலாவதி ஆகவில்லை என்பதை உறுதி செய்த பிறகு வாங்குவது அவசியம்.

>> ஏரோசால் என்பது பிரிக்கப்பட்ட நிலையில் உள்ள திரவம் போன்றது. எனவே, இன்ஹேலரை உபயோகிக்கும் முன்பு நன்றாகக் குலுக்கவும். அப்போதுதான் சரியான சதவிகிதத்தில் மருந்து நுரையீரலைச் சென்றடையும்.

>>முதல்முறையாக இன்ஹேலர் பயன்படுத்தும்போது, அதை உடனே வாயில் வைத்து அழுத்தாமல் கொஞ்சம் தள்ளி நின்று வெளியே அடித்துப்பாருங்கள். இதனால், எவ்வளவு அழுத்தம் கொடுத்தால் எவ்வளவு ஏரோசால் வெளியே வருகிறது என்று தெரியும்.

>> இன்ஹேலரை இழுக்கும் முன், நன்றாக மூச்சை முழுவதுமாக வெளியே விட்டுவிட வேண்டும். பிறகு ஏரோசாலை மூச்சிழுத்து ஒரு 10 விநாடி அப்படியே வைத்திருக்கவும். பிறகு மெதுவாக, மிக மெதுவாக மூச்சை வெளிவிட வேண்டும்.

>> இன்ஹேலரைப் பயன்படுத்திய பிறகு நன்றாக வாயைக் கொப்பளிக்க மறந்துவிடக்கூடாது. ஏரோசால் வாயினுள் தங்கியிருக்கத் தேவையில்லை.

>> இன்ஹேலரை ஒருமுறை மட்டுமே அழுத்த வேண்டும். அதற்கு மேல் அழுத்தினால் தேவைக்கும் அதிகமாக ஏரோசால் வெளிவந்து வீணாகிவிடும்.

>> இன்ஹேலர் பயன்படுத்திய பிறகு அதை மூடவேண்டும்.

>> இன்ஹேலரை பயன்படுத்தத் தெரியவில்லை என்றால் 'ஸ்பேசர்’ புட்டி ஒன்றை இன்ஹேலருடன் பொருத்தி உபயோகப்படுத்தலாம். மூச்சை இழுக்கும்போது, மருந்தின் வேகத்தை இது குறைக்கும்.

>>ஸ்பேசர் பயன்படுத்துவதற்கு முன் வழக்கம்போல் மூச்சை வெளிவிட்டுவிடவும். இன்ஹேலர் பட்டனை அழுத்தியபின் ஏரோசால் ஸ்பேசருக்குள் சென்றுவிடும், பிறகு, ஐந்து முறை மூச்சை மெதுவாக இழுத்து, பிறகு விடவும், அதன்பிறகு ஒரு முறை நன்றாக மூச்சிழுத்து, 10 விநாடிகள் அப்படியே வைத்திருந்து, பின்னர் மூச்சை மெதுவாக வெளிவிடவும்.

>>மருத்துவர் பரிந்துரைக்காமல் இன்ஹேலர் வாங்குவது தேவையற்றது. அதேபோல் இன்ஹேலர் வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கி, மருத்துவர் சொன்னபிறகுதான், உபயோகிப்பதை நிறுத்த வேண்டும்.

>>சரியான நிலையில் உட்கார்ந்தபடியே இன்ஹேலரைப் பயன்படுத்த வேண்டும். படுத்துக்கொண்டோ, சாய்ந்துக்கொண்டோ பயன்படுத்தினால் மருந்து முழுவதுமாக உள்ளே செல்லும் வாய்ப்பு குறைந்துவிடும்.

>> குழந்தைகளுக்கு ஏரோசால் கசப்பாக இருப்பதுபோல் தோன்றும். அவர்களுக்காக விதவிதமான ஃபிளேவர்களில் ஏரோசால் கிடைக்கிறது. அதையும் அடிக்கடி பயன்படுத்தாமல், தேவையானபோது மட்டும் உபயோகிக்கவேண்டும்.

>> இன்ஹேலர் ஒன்றின் விலை 200 முதல் 300 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அதை வாங்கும் வசதி இல்லாதோர் ஸிஷீtணீலீணீறீஷீக்ஷீஐ பயன்படுத்தலாம்.

>> மிகவும் அவசியமான தருணங்களில் மட்டுமே இன்ஹேலர் பயன்படுத்த வேண்டும். மூன்று நான்கு மாடி படிகள் ஏறிவிட்டு இன்ஹேலர் பயன்படுத்தினால் மனதளவில் சோர்ந்து போய்விடும். அதுமட்டும் அல்லாமல் இன்ஹேலர் பயன்படுத்துவது ஒரு வழக்கமாகிவிடும்.

இன்ஹேலரை முறையாகப் பயன்படுத்துங்கள். மூச்சுத் திணறலை தவிர்த்திடுங்கள்!

நன்றி:
கதம்பம்


Related Article:


பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog