Friday 28 June 2013

தற்கொலைகள் , - தமிழ்நாடு முதலிடத்தில்.

கடந்த வருடம் மட்டும் இந்தியாவில் 1,35,445 பேர் தற்கொலை செய்திருக்கின்றனர்.
 தேசிய குற்றப்பதிவுத் துறை அளித்திருக்கும் புள்ளிவிவரங்களின் படி மேற்கு வங்கத்தை தவிர்த்து விட்டு தொகுக்கப்பட்டுள்ள இந்த இந்திய தற்கொலைகள் பற்றிய அறிக்கையின்படி மொத்தம் 79,773 ஆண்களும், 40,715 பெண்களும் உயிரை துறந்திருக்கின்றனர்.
தற்கொலை விகிதப்படி பார்த்தால் ஒரு இலட்சத்திற்கு 11.2 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
 ஒரு மணிநேரத்திற்கு 15 தற்கொலைகளும், ஒரு நாளைக்கு 371 தற்கொலைகளும் நடக்கின்றன. பாலின ரீதியில் 242 ஆண்களும், 129 பெண்களும் ஒரு நாளில் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
தேசிய குற்றப் பிரிவுத் துறை
இந்திய அளவில் நடக்கும் தற்கொலைகளில் மொத்தம் 16,927 தற்கொலைகள் நடந்த தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்து மராட்டிய மாநிலம் 16,112 தற்கொலைகளுடன் இரண்டாம் இடத்திலும், மேற்கு வங்கம் மூன்றாம் இடத்திலும், 14,328 தற்கொலைகள் நடந்த ஆந்திரா நான்காம் இடத்திலும் உள்ளன. நகரங்கள் என்று பார்த்தால் 2,183 தற்கொலைகள் நடந்த சென்னை முதலிடத்தில் உள்ளது.
புதுச்சேரியில் மட்டும் ஒரு இலட்சம் மக்களில் 36.8 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இது இந்திய அளவில் முதலிடம் ஆகும். 2012-ம் ஆண்டில் மட்டும் 541 நபர்கள் புதுச்சேரியில் தற்கொலை செய்திருக்கின்றனர். தமிழ்நாட்டின் விகிதம் ஒரு இலட்சம் பேருக்கு 24.9 ஆக உள்ளது. இது இந்திய அளவில் மூன்றாம் இடமாகும்.
இந்திய அளவில் குடும்பப் பிரச்சினைக்காக ஒரு நாளில் 84 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். சமூக, பொருளாதார காரணங்களினால் ஆண்கள் அதிகம் தற்கொலை செய்து கொள்ளும் போது பெண்களைப் பொறுத்தவரை உணர்ச்சிகரமான மற்றும் தனிப்பட்ட காரணங்களால் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
மொத்த தற்கொலைகளில் திருமணம் செய்த ஆண்கள் 71.6 சதவீதமும், திருமணம் செய்த பெண்கள் 67.9 சதவீதமும் உள்ளனர். ஒவ்வொரு ஆறு தற்கொலைகளிலும் ஒரு தற்கொலையை திருமணம் முடித்து இல்லத்தரசியாக இருக்கும் ஒரு பெண் செய்து கொள்கிறார். ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா மாநிலங்கள் சேர்ந்து இந்திய அளவில் 50.6 சதவீத தற்கொலைகளைக் கொண்டிருக்கின்றன.
தற்கொலை செய்து கொள்வோரில் 37 சதவீதம் பேர் தூக்கு போட்டும், 29.1 சதவீதம் பேர் விசம் குடித்தும், 8.4 சதவீதம் பேர் தீ வைத்தும் உயிரை விடுகின்றனர். கடந்த வருடம் மட்டும் 50,062 நபர்கள் தூக்கு போட்டு இறந்திருக்கின்றனர். அதில் ஆண்கள் மட்டும் 34,631 பேர்கள் ஆவர்.
சென்ற வருடம் 19,445 நபர்கள் விஷம் குடித்து இறந்திருக்கின்றனர். அதில் 12,286 பேர்கள் ஆண்கள் ஆவர். இதில் தமிழ்நாடு 3,459 தற்கொலைகளுடன் முதலிடத்தில் உள்ளது. சென்ற வருடம் தீ வைத்து இறந்தவர்களின் எண்ணிக்கை 11,438 ஆகும். இதில் பெண்கள் 7,326 பேர்கள் உள்ளனர். இதிலும் தமிழ்நாடு 2,349 பேர்களுடன் முதலிடத்தில் உள்ளது. அதில் பெண்களின் எண்ணிக்கை 1,481 ஆகும்.
தீவைத்து இறப்போரில் முதலிடம் வகிக்கும் நகரமான கான்பூரில் சென்ற வருடம் 285 பேரும், இரண்டாம் இடத்தில் இருக்கும் சென்னையில் 282 பேரும் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். ஓடும் ரயிலில் விழுந்து தற்கொலை செய்பவர்களின் சென்ற வருட எண்ணிக்கை 4,259. அதில் ஆண்களின் எண்ணிக்கை 3,554 ஆகும். 1,101 பேரை பறிகொடுத்த ஆந்திரம் இதில் முதலிடத்தில் இருக்கிறது.

தேசிய குற்றப்பதிவுத் துறையின் கணக்குப்படி 2011-ம் ஆண்டில் 1,35,585 பேர்கள் தற்கொலை செய்திருக்கின்றனர். 2012-ல் இது 1,35,445 ஆக உள்ளது. ஏறக்குறைய ஒரே எண்ணிக்கைதான். 2002-ம் ஆண்டிலிருந்தே ஒவ்வொரு ஆண்டும் இந்திய அளவில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டிவிட்டது. 2002-ம் ஆண்டில் 1,10,417 பேர்கள் தற்கொலை செய்திருக்கின்றனர்.
அதன்படி பார்த்தால் இந்த பத்தாண்டுகளில் குறைந்த பட்சம் பதினைந்து இலட்சம் பேராவது தங்களது உயிரை மறித்திருக்க வேண்டும்.
இந்த விவரங்களை வைத்து சமூக ரீதியில் எங்கு ஏன் தற்கொலை நடக்கின்றன என்பதை புரிந்து கொள்ளலாம். நகரமயமாக்கம் அதிகமுள்ள தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் தற்கொலை அதிகம் உள்ளது. மது, கந்து வட்டி, மதிப்பெண் குறைவு, படிப்பு தோல்வி, தொழிற்சங்க பாதுகாப்பு இன்மை, பெண்களின் பாலியல் பிரச்சினைகள் மற்றும் பாதுகாப்பின்மை பிரச்சனை காரணமாக தற்கொலைகள் நடக்கின்றன. விசம் குடித்து தற்கொலை செய்வோரில் இந்திய அளவில் விவசாயிகள் கணிசமாக இருப்பார்கள்.
குடும்பத்தின் பொருளாதாரச் சுமை ஆண்களை அதிகம் சார்ந்து இருப்பதால் அவர்களே பெண்களை விட அதிக எண்ணிக்கையில் தற்கொலை செய்து கொள்கின்றனர். கான்பூரில் தீ வைத்து செய்யப்படும் தற்கொலைகளில் வரதட்சணை மற்றும் தலித் மக்கள் மீதான ஆதிக்க சாதி வன்முறைகளுக்கும் இடமுண்டு. ஆதலாம் அது கொலையா, தற்கொலையா என்று சுலபத்தில் கண்டறிய முடியாது. பிற பின்தங்கிய மாநிலங்களில் தற்கொலைகள் தமிழகம் அளவுக்கு சட்டபூர்வமாக பதிவு செய்யப்படாமல் இருக்க வாய்ப்புண்டு.
திருமணம் செய்த பிறகே மனிதர்கள் குடும்ப நிறுவனத்தை தனியாக நடத்தும் பொறுப்பேற்கிறார்கள் என்பதால் திருமணம் செய்தவர்கள் செய்யும் தற்கொலை அதிகமாக இருக்கிறது. இப்படி ஒவ்வொரு செய்தியும் ஒவ்வொரு சமூகப் பின்னணியை கொண்டிருக்கிறது. வாய்ப்பு கிடைக்கும் போது இது குறித்து விரிவாக எழுதுகிறோம். ஆயினும் தமிழ்நாடு, புதுச்சேரி இரண்டுமே தற்கொலையில் முதலிடத்தில் இருக்கின்றன என்ற செய்தியை தமிழ் மக்கள் பாரதூரமாகப் பரிசீலிக்க வேண்டும்.
மேலும் படிக்க:
TN tops in suicides due to failure in love and exam
India saw 1,35,445 suicides last year
நன்றி : வினவு


Related Article:


பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog