Monday 1 July 2013

தமிழர்களுக்கு கிடைத்திருக்கும் தனிப்பெருமை !

மாண்பமை நீதியரசர் திரு. பி.சதாசிவம்

இந்திய தலைமை நீதியரசராக, தமிழகத்தைச் சேர்ந்த, மாண்பமை நீதியரசர் திரு. பி.சதாசிவம், இம்மாதம் 19ம் தேதி, பதவியேற்கிறார். அவருக்கு, குடியரசுத் தலைவர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். 

60 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் இந்திய தலைமை நீதியரசராக பதவி வகிக்கவிருப்பது ஒட்டு மொத்த தமிழர்களுக்கு கிடைத்திருக்கும் தனிப்பெருமை என்பதில் மாற்றுக் கருத்து ஏதுமில்லை. 

உச்ச நீதிமன்ற தலைமை நீதியரசராக  தற்போது, மாண்பமை நீதியரசர் அல்டமாஸ் கபீர் உள்ளார். இவர், இம்மாதம் 18ம் தேதி ஓய்வு பெறுகிறார். கபீருக்கு அடுத்த பணிநிலை மூத்தவராக உள்ள நீதியரசர் சதாசிவம் தலைமை நீதியரசராக  19ம் தேதி பதவியேற்கிறார்.


ஈரோடு மாவட்டம், பவானி தாலுகா, கடப்பாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நீதியரசர் சதாசிவம். 1949ம் ஆண்டு, ஏப்ரல், 27ம் தேதி பிறந்தார். சிங்கம்பேட்டை, அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பு முடித்தார். சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல்., பட்டம் பெற்றார். குடும்பத்தில் முதல் பட்டதாரியான இவர், கிராமத்தில் முதலாவதாக சட்டப் படிப்பு முடித்தவர். விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். 

சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞர், கூடுதல் அரசு வழக்குரைஞர் , சிறப்பு அரசு வழக்குரைஞர் ஆகிய  பதவிகளை  வகித்தார். உரிமையியல், குற்றவியல், நிறுவன வழக்குகளில் முன்னிலையாகி வந்தார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக 1996ம் ஆண்டு, ஜனவரி, 8ம் தேதி நியமிக்கப்பட்டார். 11 ஆண்டுகளுக்குப் பின் பஞ்சாப் - அரியானா நீதிமன்றத்திற்கு, 2007ம் ஆண்டு, ஏப்ரலில் இடமாற்றம் செய்யப்பட்டார்.உச்ச நீதிமன்ற  நீதியரசராக  2007ம் ஆண்டு, ஆகஸ்டில் நியமிக்கப்பட்டார். தற்போது, உச்ச நீதிமன்ற தலைமை நீதியரசராக  இம்மாதம் 19ம் தேதி பதவியேற்கிறார். 40வது தலைமை நீதியரசராக பதவியேற்கும் இவர், 2014ம் ஆண்டு, ஏப்ரல், 26ம் தேதி வரை அப்பதவி வகிப்பார்.


பல்வேறு முக்கிய வழக்குகளில் மாண்பமை நீதியரசர் சதாசிவம் தீர்ப்பளித்துள்ளார். பட்டியலிட இந்த ஒரு பதிவு போதாது !


மாண்பமை நீதியரசர் எம். பதஞ்சலி சாஸ்திரி

சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை சட்டக் கல்லூரியில் படித்த நீதியரசர் பதஞ்சலி சாஸ்திரி உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதியரசராக 1951- 54ல் பதவி வகித்துள்ளார். இவர் உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது தலைமை நீதியரசராக பதவி வகித்தார். நீதிபதி பதஞ்சலி சாஸ்திரிக்குப் பின் தமிழகத்தைச் சேர்ந்த, நீதியரசர் சதாசிவம் 40வது தலைமை நீதியரசராக  பதவி ஏற்கிறார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதியரசர் பதவியில் அமரவிருக்கும் மாண்பமை நீதியரசர் திரு. பி.சதாசிவம் அவர்களை உரிய பணிவடக்கத்துடன் வணங்கி வரவேற்போம்.




Related Article:

0 கருத்துரைகள்:



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog