Tuesday, 28 May 2013

உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒடம்பை ரணகள படுத்தாதீங்கண்ணே...! வடிவேலு எக்ஸ்குளுசிவ் பேட்டி.

Vadivelu special interview

விஜயகாந்துடன் ஏற்பட்ட தனிப்பட்ட மோதல், அரசியல் காழ்ப்புணர்ச்சியாக மாற தி.மு.க., ஆதரவாக கடந்த சட்டசபை தேர்தலில் குரல் கொடுத்தார் நடிகர் வடிவேலு. ஆனால் கடைசியில் திமுக., படுதோல்வியை சந்திக்க கடந்த இரண்டு ஆண்டுகளாக சினிமாவில் வாய்ப்பு இன்றி தவித்து வந்தார் வடிவேலு. இந்நிலையில் மீண்டும் சினிமாவில் களம் இறங்கி இருக்கும் வடிவேலு தினமலருக்கு அளித்த அசத்தல் பேட்டி இதோ...

* இரண்டாண்டு இடைவெளியில் கற்ற பாடம்?


பாடத்தை விடுங்கண்ணே. ஓய்வின்றி, ரொம்ப வேகமா ஓடிக்கிட்டிருந்த குதிரை, கொஞ்சம் களைப்படைஞ்சு, பசும்புல் சாப்பிட ஒதுங்கியிருந்துச்சு. நிறைய சாப்பிட்டு, தெம்புடன், மீண்டும் ரேஸ்ல ஓட வந்திருக்கு. சரியான பாதையில்,  இலக்கை நோக்கி ஓட முடிவு செஞ்சிருக்கு, இந்த குதிரை. கண்டிப்பா, இந்த குதிரைக்கு வெற்றி மாலை கிடைக்கும்.

* இப்போதைய காமெடி  டிரெண்ட்?

இப்ப வர்ற படங்களில், காமெடி சீன்களை, குடும்பத்திலிருப்பவர்கள் ஒன்றாக போய் பார்க்க முடியாது. தனித் தனியாத் தான் போய் பார்க்கணும். இதுவரை, என் படங்கள்ல வர்ற காமெடி சீன்களை, குடும்பத்தோடு ஒன்றாக தியேட்டருக்கு வந்து, கூடி கும்மியடித்து ரசிக்கிற மாதிரி தான் இருந்தது.  இனிவரும் படங்களிலும், வடிவேலின் காமெடி அப்படித்தான் இருக்கும்.

* லோக்சபா தேர்தலில்,  பிரசாரம் செய்வீர்களா?

இப்படி, உசுப்பேத்தி, உசுப்பேத்தியே, ஒடம்பை ரணகளமாக்கிட்டீங்க. ஏற்கனவே நடந்ததை பத்தி, இப்ப பேச வேண்டாம்ணே. அந்த பிரச்னையை, புத்தகத்தை மூடுற மாதிரி, மூடி வைச்சுட்டேன். இந்த வடிவேலுவை பொறுத்தவரை, அரசியல் ஷட்டர் குளோஸ் ஆயிடுச்சு. சினிமா ஷட்டரை, மீண்டும் திறந்தாச்சு. சிங்கம், மறுபடியும் களமிறங்கிருச்சு.

* உங்களின் புதுப்படத்தில், அரசியல் உண்டா?

அய்யய்யோ...!  ஏண்ணே, இப்படி பீதியை கிளப்பி விடுறீங்க. தெனாலிராமன் ஒரு விகடகவி. சிக்கலான பிரச்னைகளுக்கு, யதார்த்தமாக முடிவு காணும் திறமைசாலி. இந்த கதை, அந்த காலத்து, ராஜா கதை. அப்போதைய காலத்தில் என்ன அரசியல் இருந்ததோ, அந்த அரசியல் மட்டும் தான், இருக்கும். தேவையில்லாமல், இப்போதைய அரசியலை, அதில் திணிக்க விரும்பலை.

* மனதை நெகிழ வைத்த விஷயம்?

தமிழர்கள் வசிக்கும் பல நாடுகளிலும், எனக்கு ரசிகர்கள் இருக்காங்கண்ணே. "நாள் முழுக்க உழைச்சிட்டு, இரவு படுக்கப்போறதுக்கு முன், உங்க காமெடி சீன்களை பார்த்தா, வேலை செஞ்ச களைப்பு பஞ்சா பறந்துபோயிடும். நல்லா தூங்கிடுவோம். ஒங்க பழைய காமெடியை பார்த்து, அலுத்துப்போச்சு சார்.  ஒங்களுக்காக மட்டுமில்லமா, எங்களுக்காக நடிக்கணும் என, வெளிநாடுகளில் உள்ள ரசிகர்கள் கேட்டுக்கிட்டாங்க.  அந்த பாசக்கார ரசிகர்களுக்காக தான், "ஜெக ஜால புஜ பல தெனாலிராமன் படத்தில் நடிக்கிறேன்.

* இரண்டு வருட அமைதிக்கு காரணம்?

அமைதிக்கு அர்த்தங்கள் ஆயிரம் இருக்கலாம். இடையில் படவாய்ப்புகள் வந்தன. இடைவெளிக்கு பின், சாதாரண படங்களில் நடிப்பதைவிட,  நச்சுன்னு ஒரு படத்தில் நடிக்கணும் என்ற ஆசை இருந்துச்சு. என் ஆசையை நிறைவேத்துற மாதிரி, லட்டு மாதிரி வாய்ப்பு வந்துச்சு, கப்புன்னு புடிச்சுட்டேன்.
நன்றி:தினமலர்


Related Article:


பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog