Tuesday 28 May 2013

தமிழனை மணக்க மாட்டேனென இனவாதம்பேசி, தமிழ்ப் பையன்கள்மேல் காறித்துப்பும் நடிகை லட்சுமி மேனன்!

Will not marry with tamilan
“தமிழ்ப் பையன்கள் என்னை காதலிக்கட்டும். ஆனா, நான் ஒரு மலையாளியைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்...’’ அண்மையில் இப்படி திருவாய் மலர்ந்தருளி இருப்பவர் வளரும் நடிகை லட்சுமி மேனன். சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பழைய சைக்கிளில் பள்ளிக்கூடம் போய்க்கொண்டிருந்த லட்சுமி மேனனுக்கு தமிழ் சினிமா இதுவரை அள்ளிக் கொடுத்திருப்பது இரண்டு கோடி வரைக்கும். அந்த நன்றி உணர்ச்சியில்தான் அவர் இப்படிச் சொல்லியிருக்கிறார். இத்தனைக்கும் திருமண வயதை எட்டியிராத மைனர் பெண். நம்ம ஊரில் இந்த வயதில் காதல், கல்யாணம் பற்றி வெளிப்படையாகப் பேசுவதற்கே தயக்கம் காட்டுவார்கள். நடிகை என்கிற தகுதி அவரை பேச வைத்திருக்கிறது.

காதலும், கல்யாணமும் அவரவர் தனிப்பட்ட விருப்பம். அதுபற்றி கருத்துச் சொல்ல அவர்களுக்கு உரிமை உண்டு. இதில் மற்றவர்கள் விமர்சிக்க என்ன இருக்கிறது என்று நினைக்கலாம். உங்கள் வீட்டுக்கு ஒருவர் விருந்துக்கு வருகிறார். ‘நீங்க கூப்பிட்டதுக்காக வந்தேன். நீங்க என்ன சாப்பாடு வேணாலும் விதவிதமா செஞ்சு வையுங்க. ஆனா, நான் எங்க வீட்டுல போயி சாப்புட்டுக்கிறேன்’ என்று சொன்னால் எப்படி இருக்கும்? அதுபோலத்தானே இதுவும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் நடந்த ஒரு சம்பவம் இது. ஒரு நடிகை ஒரு கல்லூரி விழாவில் பணம் வாங்கிக் கொண்டு பங்கேற்கச் செல்கிறார். அந்த நடிகை நிச்சயமாக அந்தக் கல்லூரியில் படிக்கும் எந்த மாணவனையும் காதலிக்கப்போவதில்லை, கல்யாணம் பண்ணிக்கொள்ளப்போவதில்லை. அப்படி இருக்கும்போது அந்தக் கல்லூரி விழாவில் பேசிய நடிகை ‘என்னை காதலிக்கும் தகுதியோ, கல்யாணம் பண்ணிக்கொள்ளும் தகுதியோ உங்களில் யாருக்கும் இல்லை’ என்று பேசினார். விளைவு - அந்த நடிகையை கல்லூரியின் பின் கேட்டின் வழியாகத்தான் அனுப்பி வைத்தனர்.

இரண்டு படங்களில் நடித்து விட்டால் தமிழ் நாட்டு ரசிகனை பையன்கள் (பாய்ஸ்) என்று அழைக்கும் தகுதி வந்து விடுமா என்ன? இது தனிப்பட்ட லட்சுமி மேனன் கருத்து மட்டும் அல்ல. பெரும்பாலான மலையாள நடிகைகளின் மன ஓட்டமே இதுதான். அதைத்தான் லட்சுமி மேனனும் பிரதிபலித்திருக்கிறார்.

கொஞ்சம் ரீவைண்ட் செய்து பாருங்கள். தமிழ்நாட்டில் கோலோச்சிய நடிகைகள், கோடிக்கணக்கில் சம்பாதித்த பெரும்பாலான நடிகைகள் இங்கு சொத்துக்களைத்தான் குவித்தார்கள். திருமணம் செய்து கொண்டு சொந்தங்களை குவித்தது அவர்கள் சொந்த மண்ணில்தான். முற்போக்கு சிந்தனை கொண்டவராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் ரேவதிகூட ஒரு மேனனைத்தான் திருமணம் செய்து கொண்டார். இப்போது பல காதல்களால் பரபரப்பைக் கிளப்பி வரும் நயன்தாராவின் காதல்கூட இப்போது மையம் கொண்டிருப்பது ஆர்யா என்ற மலையாளியிடம்தான் என்கிறார்கள்.

காதலுக்கு மதமில்லை, மொழியில்லை என்று வசனம் பேசும் நடிகைகள் தங்களின் காதல் கல்யாணம் என்றால் மட்டும் சொந்த மண்ணுக்குச் சென்று விடுகிறார்கள். பெரும் பாலும் ஒரு சில ஆண்டுகளிலேயே அதுவும் கசந்து பிரிந்து விடுகிறார்கள் என்பது தனிக் கதை. ஒரு மலையாள நடிகை தன்னை திருமணம் செய்து கொள்வார் என்று தமிழ் நாட்டில் எந்த இளைஞனும் தவம் இருக்கவில்லை.

ஒரு தமிழ் இளைஞனைக் காதலித்து திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிடலாம் என்று எந்த மலையாள நடிகையும் தமிழ்நாட்டுக்கு வருவதில்லை. காதலும், திருமணமும் எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் நிகழலாம். அது திட்டமிட்டு நடப்பதல்ல. திட்டமிட்டு நடந்தால் அது வியாபாரம். இதையே ஒரு தமிழ் நடிகை கேரளாவில் நின்று சொல்லி யிருக்க முடியுமா? கடைசியாக ஒன்று எதைப் பேச வேண்டும் என்பதை விட எதைப் பேசக்கூடாது என்பதை அறிந்து கொள்வதுதான் வளரும் கலைஞர்களுக்கு அழகு. அதை லட்சுமிமேனனும் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் நாட்டுக்கு கலைச் சேவை செய்ய வரும் வருங்கால கனவுக் கன்னிகளும் தெரிந்து கொள்ள வேண்டும்.

நன்றி:தினகரன்


Related Article:


பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog