Saturday 1 June 2013

மோசடி நடிகை லீனா மரியம் பால் புழல் சிறையில் அடைப்பு

நடிகை லீனா மரியம் பால்
பல கோடி ரூபாய் மோசடி வழக்குத் தொடர்பாக தில்லியில் கைது செய்யப்பட்ட லீனா மரியம் பாலுக்கு சென்னையில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர் கர்ப்பிணி இல்லை என்று போலீஸாருக்கு மருத்துவர்கள் அறிக்கை அளித்தனர்.
இதையடுத்து அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை அம்பத்தூரில் உள்ள கனரா வங்கியில் சில மாதங்களுக்கு முன்பு ரூ.19 கோடி மோசடி நடந்தது. இந்த வழக்கில் பாலசுப்பிரமணியம் என்பவரும், அவர் மனைவி சித்ராவும் கடந்த மார்ச் மாதம் சென்னை பெருநகர காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இந்த மோசடிக்கு துணை போனதாக அந்த வங்கியின் மேலாளர் ஜெகதீசன் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் மோசடி செய்யப்பட்ட ரூ.19 கோடி பணத்தையும், பெங்களூரைச் சேர்ந்த போலி ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜெயக்குமார் என்பவரும், அவருடைய காதலி லீனா மரியம் பால் என்பவரும் எடுத்துக் கொண்டு தப்பியோடியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் ஜெயக்குமாரை பற்றி விசாரணை செய்ததில், அவர் உண்மையான பெயர் சுகாஷ் சந்திரசேகர் என்பதும், அவர் பெங்களூருவைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
சுகாஷ் சந்திரசேகர் தொழிலதிபர் பாலசுப்பிரமணியத்திடம், கர்நாடக அரசிடம் இருந்து ரூ.140 கோடி மதிப்பிலான ஆணுறை தயாரிக்கும் ஒப்பந்ததை வாங்கித் தருவதாக சொல்லி இருக்கிறார். அதற்கு கமிஷனாக வங்கியில் முறைகேடு செய்து வாங்கிய ரூ.19 கோடி பணம், சுகாஷ் சந்திரசேகருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
ஜவுளி நிறுவன உரிமையாளர்: இதேபோல தாம்பரம் சேலையூர் புதிய பூபதிநகரைச் சேர்ந்த ஜவுளி நிறுவன உரிமையாளர் சக்கரவர்த்தியிடம் சில மாதங்களுக்கு முன்பு செல்போனில் பேசிய லீனா, கர்நாடக அரசின் மருத்துவத்துறை, போக்குவரத்துறை ஊழியர்களுக்கு சீருடைக்குரிய துணிகளை வாங்குவதற்கு உரிய ஆணை தனக்கு கிடைத்திருப்பதாகவும், அதை தங்களுக்கு வழங்க வேண்டுமானால் முன் பணமாக ரூ. 68 லட்சத்தை வங்கியில் செலுத்த வேண்டும் எனவும் கூறினாராம். மேலும் அவரிடம், கர்நாடக அரசின் ஊரக வளர்ச்சித் திட்டத்துறை செயலர் ஜெயக்குமார் ஐ.ஏ.எஸ்., என சந்திரசேகர் பேசி, பணத்தை வங்கியில் செலுத்தும்படி கூறினாராம்.
அவர்களது பேச்சை நம்பிய சக்கரவர்த்தி, ரூ.68 லட்சத்தை வங்கியில் செலுத்தினார். ஆனால் அவர்கள் கூறியபடி, சீருடை துணி வழங்குவதற்கான எந்த ஒப்பந்தமும் வழங்கப்படவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த சக்கரவர்த்தி, சென்னைப் பெருநகர காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவில் புகார் செய்தார். இந்த இரு புகார்களின் கீழும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, லீனா மரியம் பாலையும், சந்திரசேகரையும் தேடி வந்தனர்.
போலீஸார் நடத்திய விசாரணையில் இருவரும் தில்லி புறநகர் பகுதியில் ஒரு பண்ணை வீட்டில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அங்கு சென்று கடந்த திங்கள்கிழமை லீனா மரியம் பாலை கைது செய்து, ரயிலில் அழைத்து வந்தனர். அதேநேரத்தில் பண்ணை வீட்டில் இருந்த சந்திரசேகர் போலீஸிடம் சிக்காமல் தப்பியோடிவிட்டார்.
கர்ப்பம் இல்லை: கைது செய்யப்பட்ட லீனா, தான் கர்ப்பமாக இருப்பதாகவும்,எனவே தன்னை விடுவிக்குமாறும் கேட்டு வந்தார். சென்னை கொண்டுவரப்பட்ட லீனாவுக்கு வெள்ளிக்கிழமை மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் இந்தப் பரிசோனை நடந்தது. இதில் லீனா கர்ப்பம் இல்லை என்பதும், ஏற்கனவே கர்ப்பமாகி அந்தக் கருவை கலைத்திருப்பதும் தெரியவந்ததாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து தாம்பரம் நீதித்துறை நடுவர் மன்றத்தில் லீனா வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஜூன் 11-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து போலீஸார், லீனாவை புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள லீனா கேரளத்தில் பிரலமான நடிகை ஆவார். தமிழில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.
மேலும் அவருக்கு தமிழ் நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், நடன இயக்குநர்கள் ஆகியோருடன் நெருங்கியத் தொடர்பு இருந்துள்ளது.
லீனா கடந்த 2010-ல் தான் சந்திரசேகரை சந்தித்துள்ளார். அப்போது சந்திரசேகர் தான் திரைப்பட தயாரிப்பாளர் எனக் கூறி, லீனாவிடம் பழகியுள்ளார். பின்னர் இருவரும் காதலித்து வந்தனராம். சந்திரசேகரும், லீனாவும் கர்நாடகத்தில் பல்வேறு மோசடிகள் செய்து பணம் சம்பாதித்துள்ளனர். அங்கு அவர்கள் மீது சுமார் 70 புகார்கள் இருப்பதும், 3 வழக்குகள் பதியப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சந்திரசேகரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நன்றி:தினமணி


Related Article:


பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog