Wednesday 29 May 2013

அப்பாவி ஆவி -மாசாணி திரைவிமர்சனம்

??????? ???
தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாசாணியை (இனியா) காதலிக்கிறார், பணக்காரர் ராம்கி. குடும்ப கவுரவத்தை பெரிதாக நினைக்கும் ராம்கியின் அண்ணி ரோஜா, அவரை விஷம் வைத்து கொல்கிறார். ஊரும் உறவும் ஒதுக்கி வைக்க, கர்ப்பவதியான இனியா, ஊர் எல்லையில் குழந்தை பெற்று இறக்கிறார். அந்த குழந்தையை வளர்க்கிறார், ஊருக்கு சாமி சிலை செய்ய வந்த சிற்பி ஒய்.ஜி.மகேந்திரன். ஜாதிவெறி நிறைந்த அந்த ஊர் கோவிலுக்கு சிலை செதுக்காமல் திரும்புகிறார். மாசாணி ஆவியாகிவிடுகிறார். 

ஊரில் அவ்வப்போது அசம்பாவிதங்கள் நடக்க, பயந்துபோன மக்கள், 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஒய்.ஜி.மகேந்திரனிடமே சாமி சிலை செய்ய கேட்கிறார்கள். அவர் தான் வளர்க்கும் மாசாணியின் மகன் அகிலை அனுப்பி வைக்கிறார். எந்த ஊரில் தன் தந்தை கொல்லப்பட்டு, தன் தாயை ஒதுக்கி வைத்து கொடுமைப்படுத்தினார்களோ, அதே ஊருக்கு சிலை செய்ய செல்கிறார் அகில். பிறகு என்ன என்பது கிளைமாக்ஸ். 

மாசாணியாக வரும் இனியாவின் அழகு கூடியிருக்கிறது. காணாமல் போன மோதிரத்தை சாணி பிள்ளையார் மூலம் கண்டுபிடிப்பது, தேங்காய் வைத்து நிலத்தடி நீரை அறிவது எல்லாம் பழைய காட்சிகளாக இருந்தாலும், அதை இனியா செய்வதால் ரசிக்க முடிகிறது. பிறகு கர்ப்பவதியாகி அவமானப்படுத்தப்பட்டு சிக்கி தவிக்கும்போது அனுதாபம் அள்ளுகிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு ராம்கி ரீ என்ட்ரி கொடுத்தாலும், கேரக்டர் என்னவோ பழசுதான். ஆனாலும் ஆள்இன்னும் அப்படியே இருக்கிறார். 

அகில், சிஜா ரோஸ் ஆரம்பத்தில் ‘கிராமத்து நாயகன்’, ‘அருக்காணி திலகம்’ என்று பட்டம் கொடுத்துக் கொள்வது சுவாரஸ்யம். ‘அவளை நினைச்சா தூக்கம் வரமாட்டேங்குது’ என்று இவர் சொல்கிறார். ‘என்னை உங்களுக்கு பிடிக்குதுல்ல’ என்று இவர் சொல்கிறார். ஆனால், இருவரும் காதலிப்பதாக ஒரு சீன் கூட இல்லை. கதையைச் சொல்வதா? இவர்களின் காதலைச் சொல்வதா என்பதில் தடுமாற்றம். ஹீரோவின் நண்பன் பிளாக் பாண்டி, உள்ளூர் மைனர் சிட்டிபாபு, கோவில் குருக்கள் மனோபாலா ஆகியோர் சிரிக்க வைக்க முயற்சிக்கிறார்கள். ரோஜா தாம்பாளத் தட்டை எட்டி உதைத்து, கார் கதவை வேகமாகத் திறந்து மூடி, ஸ்லோமோஷனில் நடந்து வந்து நடிக்கிறார். 

இசை அமைப்பாளர் பாசில் நம்பிக்கை வரவு. பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது. பின்னணி இசையும் கதைக்கு இசைந்திருக்கிறது. ராஜகுருவின் ஒளிப்பதிவு கச்சிதம். ஆவி பழிவாங்கும் ஐடியாவெல்லாம் ரொம்ப ஓல்டு. மாசாணி பயமுறுத்தாத அப்பாவி ஆவி. 
நன்றி:தினமணி


Related Article:


பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog