Showing posts with label யாழ்பாவாணன். Show all posts
Showing posts with label யாழ்பாவாணன். Show all posts

Saturday, 13 July 2013

நீங்களும் மின்னூல் அனுப்பலாம்

உலகெங்கும் தமிழை மறந்த தமிழருக்கு ஆங்கிலம், கிந்தி, பிரெஞ்சு, டொச்சு என எம்மொழியிலும் தமிழ் கற்பிக்கும் நூல்கள் முதன்மையாகத் தேவைப்படுகிறது.

தமிழ் வாழத் தமிழ் இலக்கியங்கள் முதன்மையாக இருக்க வேண்டும். அதற்கு தமிழ் இலக்கியங்களை ஆக்குவோருக்கான கவிதை, பாட்டு, கதை, நாடகக் கதை, திரைக் கதை, நகைச்சுவை, கட்டுரை எழுத உதவும் நூல்கள் இரண்டாவதாகத் தேவைப்படுகிறது.

நம்மாளுகள் இலக்கியங்களை ஆக்கினால், அதனை வெளியிடுவதற்கான அறிவைப் பெற உதவும் அச்சு இதழியல், மின் இதழியல் சார்ந்த நூல்கள் மூன்றாவதாகத் தேவைப்படுகிறது.

இத்தனையும் இருந்தால் போதாது. நாம் தமிழர் எனக் கூறி நீண்ட நாள் வாழ்ந்து தாய்த் தமிழைப் பேண உளநலம், உடல் நலம், நெடு நாள் வாழ உதவும் மருத்துவ நால்கள், வழிகாட்டல் மற்றும் மதியுரை (ஆலோசனை) நால்கள் நான்காவதாகத் தேவைப்படுகிறது.

எல்லாம் சரி, நாம் தமிழர் எனக் கூறினால் நமது வரலாற்றுப் பின்புலம் தேவைப்படுகிறது. தமிழர் வரலாற்று நால்கள், தமிழர் ஆய்வு நால்கள், தமிழ் வரலாற்று நால்கள், தமிழ் ஆய்வு நால்கள் எனத் தமிழரின் அடையாளத்தையும் தமிழின் அடையாளத்தையும் வெளிப்படுத்தக்கூடிய நால்கள் ஐந்தாவதாகவும் அதிகமாகவும் தேவைப்படுகிறது.

மேற்படி எதிர்பார்ப்புடன் தான் உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண எனது மின்னூல் களஞ்சியத்தை மேம்படுத்துகிறேன். தற்போது ஐந்நூற்றிற்கு மேற்பட்ட நூல்கள் இருவேறு இணையச் சேமிப்புத் தளங்களில் பேணுகிறேன். இவற்றில் 50GB இற்கு மேற்பட்ட இடவசதி உண்டு. இவற்றில் ஆகக்குறைந்தது 5000 - 50000 நூல்களைச் சேமிக்கலாம்.

நானொரு சின்னப்பொடியன் யாழ்பாவாணன், மேற்காணும் எல்லை மீறிய பணித் திட்டத்தை என் உள்ளத்தில் விதைத்து இறங்கிவிட்டேன். என்னிலும் பெரியோர்களாகிய நீங்கள்; தமிழறிஞர்களின் மின்நூல்களை அனுப்பி எனக்கு உதவினால், இப்பணித் திட்டத்தை மேலும் மேலும் மேம்படுத்த இடமுண்டு.

முதலில் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி மின்னூல் களஞ்சியத்தைப் பார்வையிடுங்கள்.
http://yarlpavanan.wordpress.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/ 
இக்களஞ்சியங்களில் இல்லாத மேலே கூறிய வகைகளில் தேவைப்படும் நூல்களை நீங்களும் அனுப்பலாம். மின்னூல்கள் HTML Help File ஆகவோ Acrobat Adobe Reader File ஆகவோ இருக்கலாம். உங்களைப் போன்றவர்களால் தான் "தமிழறிஞர்களின் மின்நூல் களஞ்சியம்" மேம்பட இருக்கிறது.

தாங்கள் தமிழறிஞர்களின் மின்நூல்களை அனுப்பும் போது; தங்கள் இணையத்தள முகவரி, மின்னஞ்சல் முகவரி, அஞ்சல் முகவரி, நடைபேசி இல, தொலைபேசி இல எனத் தங்களைத் தொடர்புகொள்ளக்கூடிய தகவலையும் அனுப்புங்கள்.

ஏனெனில், எனது தளத்தில் தமிழறிஞர்களின் மின்நூல்களை வழங்கியோரின் விரிப்பைத் தனிப் பக்கமாக வெளியிட இருப்பதால் தான் இதனைத் தெரிவிக்கின்றேன். தமிழறிஞர்களின் மின்நூல்களை அனுப்ப விரும்பும் நண்பர்கள் எல்லோருக்கும் இது பொருந்துமென நம்புகிறேன்.

உலகெங்கும் தூய தமிழைப் பரப்பிப் பேண உதவும் மின்நூல்களை அனுப்ப விரும்புவோர் Email: yarlpavanan@hotmail.com, Mobile: 0094750422108 ஊடாகத் தொடர்புகொள்ளலாம்.


Continue reading →

Friday, 7 June 2013

நம்மாளுகள் அழிவது

நேற்று
உறவுக்குப் பகை கடன்
இன்று
உறவுக்குப் பகை பணம்
நாளை
பணம், கடன் இரண்டாலுமே
நம்மாளுகள் அழியலாம்...
அடே! யாழ்பாவாணா!
இன்றே
நம்மாளுகள் அழிவது
பணம், கடன் இரண்டாலுமே!
Continue reading →

Monday, 13 May 2013

பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...


உறவுகளே! உலகெங்கும் தமிழ் பரப்பிப் பேணும் நோக்கில் கிடைக்க முடியாத தமிழ் நூல்களைத் திரட்டி மின்நூல் களஞ்சியம் ஆக்கியுள்ளேன். இங்கு அறுபதிற்கு மேற்பட்ட தலைப்புகளின் கீழ் ஐந்நூறிற்கு மேற்பட்ட நூல்கள் உள்ளன.

ஆங்கில வழியில் தமிழ் கற்றல் (தமிழை மறந்த நம்மாளுகளுக்கும் தமிழை விரும்பும் பிறமொழிக்காரர் கற்கவும்), தமிழிலக்ணம், தமிழிலக்கியம், இதழியல், படைப்பாளியாக (கவிஞராக, எழுத்தாளராக, ...) மருத்துவம், உளவியல், உளநல வழிகாட்டலும் மதியுரையும் (ஆலோசனையும்) எனப் பயன்தரும் பல நூல்கள் உள்ளன.

இவற்றையெல்லாம் நீங்கள் பதிவிறக்கிப் பயன்படுத்த http://yarlpavanan.tk தளத்தில் "தமிழ்மின்நூல்கள்" என்ற பக்கத்தைப் பார்க்கவும்.

உறவுகளே! தனிமரம் ஒரு போதும் தோப்பாவதில்லை. அதுபோல எனது தனித்த முயற்சியும் வெற்றியைத் தராது. எனவே, தங்கள் ஒத்துழைப்பு மிகவும் எனக்குத் தேவைப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள உங்கள் நண்பர்கள் எல்லோருக்கும் ஊடாக இச்செய்தியைத் தெரிவித்து எல்லோரும் பயன்படுத்த ஒத்துழைப்புத் தாருங்கள்.

எனது மின்நூல் களஞ்சியத்தில் இல்லாத பயன்தரும் தமிழ் மின்நூல்கள் தங்களிடம் இருப்பின், yarlpavanan@hotmail.com என்ற மின்னஞ்சலிற்கு அனுப்பி வையுங்கள். அவற்றை எல்லாம் எனது மின்நூல் களஞ்சியத்தில் இணைக்க முடியும். இவ்வுதவி உங்கள் ஒத்துழைப்புடன் இம்மின்நூல் களஞ்சியம் மேம்பட உதவும்.

Continue reading →

Friday, 3 May 2013

தும்மலும் விளக்கமும்


மாலை நேர மாமர நிழலில்
தென்னங்குற்றியின் மேலே
குந்தியிருக்க வந்தாங்க
நண்பர்கள்...
நானும் குந்தினேன் ஆங்கே!
தும்மலோ தும்மல் வந்துந்த
தும்மினேன்...
அடுத்தடுத்துத் தும்மினேன்!
முதலாம் தும்மலுக்கு
தாய் நினைக்கிறாளாக்கும்
என்றான் நண்பன் ஒருவன்!
இரண்டாம் தும்மலுக்கு
தகப்பன் நினைக்கிறாராக்கும்
என்றான் நண்பன் ஒருவன்!
மூன்றாம் தும்மலுக்கு
காதலி நினைக்கிறாளாக்கும்
என்றான் நண்பன் ஒருவன்!
உந்த மூஞ்சியைக் காதலிக்க
எந்த ஏமாளி வாய்ப்பாள்?
என்றான் நண்பன் ஒருவன்!
முட்டாள் பையன்களே...
மூக்குமுட்ட மூக்குச்சளியடா
வெளிக்காட்ட முன்னர்
தும்மல் தானடா
முதலில தலையைக் காட்டும்
என்று
நானுரைக்கத்தான்
எட்ட விலகினர் எல்லோருமே!
தலைக்குத் தலை
தாவிப் பாய்ந்து தொற்றும்
தடிமன் (மூக்குச்சளி) ஆளோட
கிட்ட நிற்காமல்
எட்ட நிற்கப் பார்க்கிறியளே
தடிமனும் காற்றாலே பரவுமென்றேன்!
Continue reading →

Saturday, 13 April 2013

இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்


உருளும் உலகில்
உருளுவது
இரவும் பகலும் அல்ல
கரையும் காலமும் தான்!
2013 சித்திரை 14 இல
சித்திரைப் புத்தாண்டு என்றதும்
கிழட்டுப் பிள்ளை எனக்கும்
இளமை வந்து முட்டுதே!
இன்னும்
பல்லாண்டு வாழணும்
தமிழுக்குப் பல செய்திடணும்
புத்தாண்டு பிறக்கையில்
எனக்குள் பிறக்கும் இளமையை
நல்லதிற்கே பாவிக்கணும் என்று
எண்ணத்தோன்றுதே!
உலகத் தமிழ் உறவுகளே
இனிய சித்திரைப் புத்தாண்டு நாளில்
நல்ல எண்ணங்களை எண்ணி
நீடூழி வாழ வாழ்த்தும்
உங்கள் யாழ்பாவாணன்!



Happy April Tamil and Sinhala Year!
You will meet bright future in this year!
Wish you all the best!


සුභ අළුත් අවුරුද්දක්!
ඔයාලාට මගේ පිරාර්ථනව!


Continue reading →

Tuesday, 9 April 2013

நாடு நல்லாக் கெட்டுப் போச்சு


முகத்தார்: என்னங்க நடுத்தெருவில தாய்க்குலமே கூடிநிற்குது...

சிவத்தார்: வாலை இரண்டு சேலை இன்றி குடிச்சுப் போட்டு வெறியில விழுந்திட்டாங்க... அதுதான் அவங்கட மானம் காக்க கூடிநிற்கிறாங்க...

முகத்தார்: குடிபானக் கடைகளிலே காளைகள் மட்டுமெல்லோ அடிக்கிறங்கா...

சிவத்தார்: ஓய்வகங்கள்(Rest House), உயர் உணவு விடுதிகள் (Resturant) போன்றவற்றில் காளையும் வாலையும் சேர்ந்தெல்லோ குடிக்கினம்... இனி, அரசு மகளீருக்கென தனிக் குடிபானக் கடைகளும் திறக்க இருப்பதாகக் கதை அடிபடுகுது...

முகத்தார்: குடிமக்களை குடிக்கப் புகைக்க வைச்சு வருவாய் ஈட்ட அரசின் புதுவழி இதுவோ... நாடு நல்லாக் கெட்டுப் போச்சு...

சிவத்தார்: சும்மா அரசில பழி போடாதையுங்கோ... ஆண், பெண் சம உரிமை இதிலும் இருக்கணுமாம்... அது தான் மகளீர் குடிபானக் கடைகளாம்...
Continue reading →

Thursday, 4 April 2013

யாழ் உதயன் நாளேடு சாகாததேன்


இலங்கையின்
வடபுலத்தே
அடிக்கடி அடிவேண்டும்
செய்தி நாளேடு
உதயன் என்றே சொல்லலாம்!
இலங்கையில்
அடிக்கடி அடிவேண்டும்
சாவடையும்
இதழியலாளர்களும்
வடபுலத்தாரே!
இதழியலாளரின் எழுதுகோலுக்கு
அரசனும் அஞ்சுவான்...
பாரதியின் எழுத்துக்கு
பிரிட்டிஸ் வெள்ளையன் நடுங்கியதும்
நல்ல எடுத்துக்காட்டெல்லோ!
உண்மை தான்...
செய்தி நாளேடுகள்
உண்மையை எழுதிப்போட்டால்
அரசுக்கு நெருக்கடி
அடிக்கடி வந்து சேர
தாக்குப் பிடிக்க முடியாமல்
செய்தி ஏடுகளோடு
மோதிக் கொள்வது சரியாமோ?
கத்தி விளிம்பில் (கூர் முனை மேல்)
காலடி வைத்து நடைபோடுவோர்
இதழியலாளர் என்றால்
நெருப்பாற்றைக் கடப்போரே
இலங்கை
செய்தி நாளேடுகள் என்பேன்!
இன்றைக்கு நேற்றல்ல
நெடுநாளாக
அடிக்கடி அடியுடை வேண்டியும்
யாழ் உதயன் நாளேடு சாகாததேன்?
உண்மையை உரைப்போருக்கு
சாவில்லைக் காணுமென்ற துணிவோ...
அடிக்கடி அடியுடை வேண்டுவதால்
வாசகர் எண்ணிக்கை பெருக
வருவாய் பெருகுமென்ற துணிவோ...
என்னமோ
காய்க்கிற மாவுக்குக் கல்லெறி போல
யாழ் உதயன் நாளேடும்
இலங்கையின் வடபுலத்தாரின்
உண்மையை உரைக்கிறது என்பதற்கு
வேண்டும் அடியுடையே சான்று!

"கிளிநொச்சி உதயன் செய்தி நாளேட்டுச் செயலகம் அடித்து நொருக்கப்பட்டு பல இலட்சம் சொத்து அழிக்கப்பட்டு நான்காளுகள் புண்பட்டனர்" என்ற செய்தியை 04/04/2013 அன்று செய்தி ஏட்டில் படித்ததும் எழுதியது.
Continue reading →

Saturday, 30 March 2013

உங்களுக்குத் தெரியுமா?


அந்தக் காலத்துப் பாண்டி நாடு தான்
இந்தக் காலத்துத் தமிழ் நாடாம்
அந்தக் காலத்துச் சோழ நாடு தான்
இந்தக் காலத்துக் கேரள நாடாம்
அந்தக் காலத்துச் சேர நாடு தான்
இந்தக் காலத்துக்
கன்னடாவா
தெலுங்கானாவா
ஆந்திராவா
???
தெரிந்தால் சொல்லித் தாருங்கள்!
Continue reading →

"கடவுள் இல்லை" என்று



"கடவுள் இல்லை" என்பது
பொய்
தம்பி, தங்கைகளே!
உங்களுக்கு
உங்கள் மேல்
நம்பிக்கை இருக்குமாயின்
உங்களுக்குள்ளே
உங்களை இயக்குவதும்
கடவுளே!
உங்களுக்கு
உங்கள் மேல்
நம்பிக்கை இல்லையாயின்
உங்கள் இயக்கத்தை
வானிலிருந்து பார்ப்பவரும்
கடவுளே!
உங்களுக்கு
எவ்வளவுக்கு எவ்வளவு
தன்னம்பிக்கை இருக்கிறதோ
அவ்வளவுக்கு அவ்வளவு
உங்கள் வெற்றிக்குப் பின்னே
இருப்பவரும் - அந்தக்
கடவுளே!
மறந்து போயும்
"கடவுள் இல்லை" என்று
எண்ணிப் போடாதையுங்கோ!
Continue reading →

Saturday, 23 March 2013

தமிழகத்தில் தீக்குளிப்பு முடிவுக்கு வருமா?


ஒரு பிள்ளை வேண்டி
ஒரு கோடி கடவுளிடம்
கண்ணீர் வடிக்கிறேன்...
மலடன் என
ஒதுக்கி வைக்கும் மக்கள் முன்
பிள்ளை பெற இயலாத
எனக்குத் தான் தெரியுமடா
தீக்குளிப்பால் சாவடையும்
ஒவ்வொருவரின் உயிரின் பெறுமதி!
ஈழத் தமிழரின் விடியலை
சிங்கள அரசின் கொடுமையை
உலகின் காதுக்கு இடித்துரைக்க
ஒவ்வொரு தமிழக உறவும்
தீக்குளித்துச் சாகையிலே
என் பிள்ளையில்லாத் துயரை விட
சாவடையும் தமிழக உறவுகளின்
துயரைத் தாங்கிக் கொள்ள இயலாத
எனக்குத் தான் தெரியும்
சாவடைந்த உறவுகளின்
பெற்றோரின் துயர் கனமானது என்று!
பொது நோக்கில்
பிடரியைத் தேய்த்து எண்ணியும்
தமிழர் எண்ணிக்கைக் குறைவை
ஈடு செய்ய
வழியின்றி விழி பிதுங்கும்
நாங்கள்
தமிழகத்தில் தீக்குளிப்பை
முடிவுக்குக் கொண்டுவர வேண்டாமா?
போராடாதே என்று சொல்ல
எனக்கு
உரிமை இல்லாவிடினும்
தீக்குளித்துச் சாவதை
நிறுத்து என்று சொல்ல
எனக்கு
உரிமை வந்து விடுமா?
இல்லைத் தான்...
துயருறும்
உள்ளங்களின் வேண்டுதலை ஏற்றாவது
தமிழகத்தில் தீக்குளிப்பை நிறுத்த
முன்வாருங்களேன்!
தீக்குளிப்பைத் தூண்டுவோரே
தீக்குளிப்புக்கு மாற்று வழி கூறி
சாவடையும் பிள்ளைகளை
காப்பாற்ற முன்வாருங்களேன்!

Continue reading →

Wednesday, 20 March 2013

சற்று முன் கிடைக்காத தகவற் படி


அடே! குடிகாரா டோய்!
குடி குடியைக் கெடுக்குமென
படித்தவர் சொன்னாலும்
குடித்த பின் வெறி முத்தி
ஆடைகள் களைந்த நிலையில் கிடந்தை
குமரிகள் எடுத்துச் சொன்னாலும்
குடிகாரனென ஊரார் கழித்து விட்டாலும்
குடிப்பவர் குடியை நிறுத்தியதாக
இதுவரை - எனக்கு
எந்தச் செய்தியும் கிட்டவில்லையே!

அடி! குடிகாரி அடியேய்!
படிச்சுப் படிச்சுப் பெற்றவர் சொல்லியும்
அடி பிள்ளாய் குடியை விட்டியா?
குடிச்சுப் போட்டு
கொங்கைக் கச்சோடும் கோவணத்தோடும்
தெருவில் வீழ்ந்து கிடந்த போது
உன் வாயில் கிடந்த
கருவாட்டுத் துண்டைக் கவ்வியிழுக்க வந்த
நாய்கள் உன்னைக் கடித்த போதே
உன்னைப் பார்த்துச் சிரித்த
பொதுமக்களைக் கண்டிருந்தும்
உன்னைப் போன்றவர்கள் குடியை நிறுத்தியதாக
இதுவரை - எனக்கு
எந்தச் செய்தியும் கிட்டவில்லையே!

எனக்குக் கிடைத்த செய்திகளின் படி
படித்தவரும் படிக்காதவரும்
குடியோ குடியெனக் குடிக்க
அரசு வருவாய் நிரப்ப
நாம்மாளுகள் தானே
குடியாலே குடியைக் கெடுத்தும்
அடிக்கடி சாவை அணைக்கிறார்களாமே!
சற்று முன் கிடைத்த தகவற் படி
ஆண், பெண் இருபாலாரும்
குடிப்பதில் நாட்டமாம்...
சற்று முன் கிடைக்காத தகவற் படி
குடியாலே
வாழ்வில்(பாலியலில்) சுகமிழந்து
இருப்பதெல்லாம் விற்றுச் சுட்டு
ஈற்றில் சாவடைவோர் எண்ணிக்கை
நாளுக்கு நாள் ஏறுவதாய்
செய்தி ஏட்டில் இருக்கக் கண்டேன்!

Continue reading →

கரித்துண்டு









அரசு கவிழும் என்றால்
மக்களிடையே
வேலையில்லாச் சிக்கல் தான்!
வீட்டில
உறவுகளிடையே முறிவு என்றால்
தலைவர்மாருக்கு
வேலையில்லாச் சிக்கல் தான்!
தெருவெளியில
காதல், மோதல் என்றால்
காளைக்கும் வாலைக்கும்
வேலையில்லாச் சிக்கல் தான்!
நடுவழியில
பிணவாடை வீசும் என்றால்
ஆளுக்காள்
வேலையில்லாச் சிக்கல் தான்!
செய்தி ஏட்டில
எத்தனையோ
இழவுச் செய்தி வந்தாலும்
அரசின் காதுக்கு எட்டல...
என் பாட்டில
எழுதக்கூட
எழுதுகோல் வேண்டக் காசில்லை...
நானும்
பாரதியைப் போல
கரிதுண்டு பிடித்து
தெருவெளியில எழுதப் போறேனுங்க...!

செய்தி:-
இந்தியாவில்
வெள்ளையனுக்கு எதிராக
பாரதி எழுப்பிய போர் முரசெல்லாம்
கரிதுண்டால் எழுதி
தெருச்சுவரெல்லாம்
நிரம்பி வழியக் கிடந்ததாமே!
சான்றுக்கு
பாவலர் வைரமுத்துவின்
"கவிராஜன் கதை" என்னும்
புதுக்கவிதைக் காவியத்தை
படித்துப் பாருங்களேன்!


Continue reading →

Saturday, 16 March 2013

அதற்கு அப்புறம் தானே...

இலங்கையைச் சர்வதேச நீதிமன்றில் முன்னிறுத்தத் தமிழக மாணவர்கள் கொந்தளிக்கின்றனர். ஈழத்து மாணவர் அவர்களுக்காக ஒத்துழைப்புப் போரை நடத்தினால் இலங்கைப் படையினர் சுட்டுக் கொல்லலாம். ஆனால், ஏனைய 155 நாடுகளிலுள்ள தமிழர்கள் ஏன் தமிழக மாணவர்களின் எழுச்சிக்குத் தமது நாடுகளில் ஒத்துழைப்புப் போரை நடத்தவில்லை? தமிழக மாணவர்களின் எழுச்சிக்கு உலகத் தமிழர் ஒன்றிணைந்து குரல் கொடுத்தால் தானே, ஐக்கிய நாடுகள் சபையின் செவிப்பறை வெடிக்கும். அப்பதானே, இலங்கையைச் சர்வதேச நீதிமன்றில் முன்னிறுத்த முடியும். அதற்கு அப்புறம் தானே, ஈழத் தமிழர் சுதந்திரமாகவும் அமைதியாகவும் மகிழ்வோடும் வாழ முடியும்.
Continue reading →

Tuesday, 12 March 2013

ஈழத்தில் ஐ.நா. படையினர் (இராணுவம்)


நாட்டுக்குள்
எதிரியை நுழைய விடாது
தாக்க வரும்
எதிரிப்படையை விரட்டி விட
நாட்டின் எல்லைகளிலே
காத்திருக்க வேண்டியவர்களே
படையினர் (இராணுவம்)!
ஆனால், பாருங்கோ
அடிச்சுச் சொல்றேனுங்கோ
மக்களில்லா இடம் பார்த்து
இருக்க வேண்டியவர்களே
படையினர் (இராணுவம்)!
உலகமே
ஈழத்தைப் பாரு...
தமிழ் மக்களின் நிலம் பறித்து
சிங்களப் படை
குடியிருப்பதால் தானே
உலகெங்கும்
இருநூற்றைம்பது நாடுகளில்
ஈழத் தமிழர் காலடி வைத்தனர்!
இன்றைக்கு(10/03/2013)
யாழ் பத்திரிகைகளில்
படையினர் கையகப்படுத்திய
ஈழத் தமிழர் நிலங்களை
சிங்கள அரசு
அரசுடைமையாக்கப் போவதாக
வந்த செய்தியைக் கேட்டு
நாசாவை முந்திக் கொண்டு
ஈழவர்
நிலவில் குடியிருக்க
முந்த வேணும் போல கிடக்கே!
உலகெங்கும்
தூங்கிக் கொண்டிருக்கும்
ஈழத் தமிழறிஞர்களே...
விழித்துக்கொள்ளுங்கள்...
தமிழ் நாட்டவர்
தம்மைச் சாகடிக்கின்றனர்
ஈழத் தமிழருக்காக...
சாவடைந்த ஈழவரை
எண்ணிப்பாரும்...
இனியும்
நீங்கள் உறங்கினால்
ஈழத் தமிழரழிவதை
யார் தடுப்பார்?
தூக்கம் கலைந்து
உண்மையைக் காவிச் சென்று
ஐக்கிய நாடுகள் சபையிலே
இறக்கி வைக்க முன்வாருங்கள்!
ஐக்கிய நாடுகள் சபையிற்குள்ளே
நுழைந்த அலைவரிசை(Chanel) - 04 படக்காட்சி
சிறு மாற்றத்தைத் தருமாயின்
உலகத் தமிழறிஞர்கள் இணைந்து
ஈழவரின் உண்மைகளை
கடல் கடலாக
ஐக்கிய நாடுகள் சபையிற்குள்ளே
கொண்டு போய்ப் பறித்தால்
ஐ.நா. அமைதிப்படை
ஈழம் புகுந்து
தமிழர் நிலங்களிலுள்ள
சிங்களப் படைகளை வெளியேற்றி
நிலவில் போய்க் குடியிருக்கவுள்ள
ஈழத் தமிழரை
சொந்த நிலங்களில் வாழ
வழியமைத்துத் தருமே!
Continue reading →

Saturday, 9 March 2013

பேச்சும் கல்லெறியும்


சிவத்தார்: நீங்கள் அரங்கிலே ஏறினதும் பார்வையாளர் கைதட்டல் கூடவாக்கிடக்கே! தங்கள் பேச்சில் ஏதாச்சும் மருந்து மாயம் உண்டோ!

முகத்தார்: எனக்குத் தெரிந்ததைத் தானே சொன்னேன்... சொல்கிறேன்... சொல்வேன்... அவங்களுக்குப் பிடிச்சிருக்குப் போல...

சிவத்தார்: நானும், எனக்குத் தெரிந்ததைத் தானே சொன்னேன்... ஆனால், கைதட்டலுக்குப் பதிலாகக் கல்லெறி தான் கிட்டுது...

முகத்தார்: நான் படித்துத் தெரிந்ததிலே சொல்லியிருப்பேன். நீயோ, தெருவெளியிலே பொடி, பெட்டையளின்ரயை பார்த்துத் தெரிந்ததிலே சொல்லியிருப்பாய்... அது தான் கல்லெறி விழுதோ...?

Continue reading →

Thursday, 7 March 2013

பெட்டைப்பிள்ளை பிறக்க பெண் காரணமல்ல...


மாமியார் மருமகள் முறுகலில் "இவளொருத்தி வந்தாள், பெட்டைச்சிகளையே பெத்துக்கொட்டுகிறாள்." என்று மாமியார்  திட்டிக்கொள்ள மருமகள் கண்ணீர் வடிப்பதைக் கண்டிருப்பியள். உங்களை இம்மருமகளாகக் கருதி/எண்ணி; உங்கள் எண்ணத்தில் என்ன தோன்றியிருக்குமெனக் கூறமுடியுமா?

தாயின் முட்டையும் தந்தையின் அணுவும் இணைந்தால் கரு உருவாகும். இவ்வுருவாக்கத்தில் ஆண், பெண் குழந்தைகளைத் தீர்மானிப்பதே தாய், தந்தையரின் அணுக்கள் செய்யும் பணி.

ஒவ்வொருவருக்கும் அவர்களது அணுக்களில் 23 இணை(சோடி) குரோமோசோம்கள் உள்ளன. இதில் 22 இணை(சோடி) உடல் நிலைக்கும் ஒரு இணை(சோடி) பால் நிலைக்கும் உதவுகிறது.
அதாவது
பெண்களில் 22+(x+x) குரோமோசோம்களும்
ஆண்களில் 22+(x+y) குரோமோசோம்களும்
காணப்படும்.
கருவுருவாக்கத்தில் பெண்ணிலுள்ள x குரோமோசோமும் ஆணிலுள்ள x குரோமோசோமும் இணைந்தால் பெண் குழந்தையும்; பெண்ணிலுள்ள x குரோமோசோமும் ஆணிலுள்ள y குரோமோசோமும் இணைந்தால் ஆண் குழந்தையும் பிறக்கும்.

ஒரு இணையர்கள்(தம்பதிகள்) அடுத்தடுத்து ஆண் குழந்தை பெற்றுக்கொள்வதற்கோ பெண் குழந்தை பெற்றுக்கொள்வதற்கோ, ஆணிலுள்ள x, y குரோமோசோம்களே காரணம். எனவே, இதிலிருந்து பெட்டைப்பிள்ளை பிறக்கப் பெண் காரணமல்ல என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.

இரட்டைப் பிள்ளை, 3 பிள்ளை, 5 பிள்ளை, 7 பிள்ளை, 11 பிள்ளை, 13 பிள்ளை எனப் பெறுவதற்கும்; எங்களுக்கு வந்தாளே ஒருத்தி இவள் தான் எல்லாவற்றுக்கும் காரணமென்றும் உங்கள் மாமியார் உங்களைத் திட்டவும் கூடும். ஏனென்றால், நம்மாளுகள் ஆண்களில் குறைகாணாமல்; அன்று தொட்டு இன்று வரை பெண்களில் மட்டும் குறை காண்பது வழக்கமாயிற்று.

ஆணின் அணுவும் பெண்ணின் முட்டையும் இணைந்தால் கருவுருவாகும் என்கிறோம். உருவான கரு பிளவுறும் நிலையும் ஏற்படுமாம். இவ்வாறு பிளவுறும் கருக்கள் தனித்தனியே குழந்தைகளை உருவாக்குமாம். இதன்படி பிளவுறும் கருக்களின் எண்ணிக்கைக்கேற்ப ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் ஒரு பெண்ணின் வயிற்றிலிருந்து பிறக்கிறதாம். இதற்கு ஆண், பெண் இருசாரரரிலும் குற்றமில்லையே!

Continue reading →

Friday, 1 March 2013

பொருள்


சிலர்
நமக்கு ஆதரவு தந்து
புகழ் அடைகிறாங்க...
சிலர்
நம்மை எதிர்த்து நின்று
புகழ் அடைகிறாங்க...
அப்படியாயின்
நாங்கள்
புகழின் உச்சியில்
இருக்கிறோம் என்று தானே
பொருள்கொள்ள வேண்டுமே!

இங்கு கூறப்படும் புகழ்=பிரபலம் அல்லது Famous ஆகும்.

ஆக்கம்: யாழ்பாவாணன்
http://yarlpavanan.tk


Continue reading →

Monday, 25 February 2013

உளவியல் நோக்கில் ஒரு படைப்பாளி


ஒரு படைப்பாளி நல்ல உளவியலாளனாக இருக்க வேண்டியதில்லை. படைப்பாளியாக வந்து விட்டால்; தன்னைப் படைப்பின் பாத்திரங்களாகக் கருதி தக்க உணர்வை வெளிப்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். ஆயினும், உளவியலாளனாக இருந்தால் படைப்பின் பாத்திரங்களாக வருவோரின் உளநிலையை வெளிப்படுத்த உதவும்.

எழுதுகோல் ஏந்துவோரின் எண்ணத்தில் எப்போதுமே தனது படைப்புகள் யாவும் சிறந்தது என்ற உளப்பாங்கு இருந்து வருகிறது. அது அவர்களது உண்மைத் திறமைகளை வெளிக்கொணரத் தடையாகவுள்ளது. தான் எழுதுவதெல்லாம் சிறந்ததென எண்ணுவதால் மாற்றார் படைப்புகளைப் படித்து, மாற்றார் படைப்புகளை விடத் தனது படைப்புகளைச் சிறப்பாக ஆக்க முடியாது போகிறது.

தான் படைக்கும் படைப்புத் தான் சிறந்தது என்றும் மற்றவர்களுடையது கொஞ்சம் தரக்குறைவு என்றும் சிலர் எண்ணுகிறார்கள். அதனால், மற்றவர்களுடைய படைப்புகளைப் படித்து; மற்றவர்களுடைய எழுத்தாற்றல் நுட்பங்களை, கையாளும் குறுக்குவழிகளை, உருவாக்கும் பாத்திர அமைப்பை, கதைக் கருவை, கதை நகர்த்தும் முறையைக் (பாணியைக்) கற்றுக்கொள்ள முடியாது போகிறது. இதனால், தமது படைப்புகளின் தரம் குறைய வாய்ப்பு உண்டு.

ஒரு படைப்பாளி மற்றைய படைப்பாளி மீதான திறனாய்வை (விமர்சனத்தை) மேற்கொள்ளும் முன் மேலே நான் கூறிய மூன்று உளப்பாங்கையும் கடைப்பிடிக்க வேண்டும். மற்றவர்களுடைய படைப்புகளைத் திறனாய்வு (விமர்சனம்) செய்யும் போது; படைப்புகளை ஆக்கியோன் மென்மேலும் சிறந்த படைப்புகளை ஆக்கத் தூண்டவும் மக்களுக்கு (சமூகத்திற்கு) நன்மை தரக்கூடியதுமான படைப்புகளை ஆக்கவும் தங்கள் திறனாய்வு (விமர்சனம்) பின்னூட்டமாக இருக்க வேண்டும். அதற்காக திறனாய்வுப் (விமர்சனப்) பக்கம் தலையைக் காட்டாமல் எந்தப் படைப்பாளியும் ஒதுங்கி இருக்க முடியாது. அதாவது, உங்களது திறனாய்வு (விமர்சன) ஆற்றல் தான் உங்களைச் சிறந்த படைப்பாளி ஆக்கிறது.

ஆடத் தெரியாதவளுக்கு அரங்கு (மேடை) சரியில்லை என்ற போக்கில் சிலர் தாம் கையாளும் இலக்கிய வடிவம் தான் சிறந்தது மற்றைய இலக்கிய வடிவம் சிறந்ததல்ல என எண்ணக் கூடாது. எடுத்துக்காட்டாகக் கதையென்றால் பத்துப் பக்கத்தில் எழுத வேண்டும்; பா(கவிதை) என்றால் பத்து வரிகள் போதும்; கதையை விடக் பா(கவிதை) வாசிப்பவருக்கு வசதி என எந்தப் பாவலனும் (கவிஞனும்) எண்ணக் கூடாது. ஏனெனில், எல்லா இலக்கிய வடிவங்களும் சமவுரிமை பெற்றவை. அதாவது, தரத்தில் எல்லாம் சமனானவை. மக்களை அல்லது வாசிப்பவரைக் களிப்பூட்ட அல்லது மகிழ்வூட்டத் துணைபுரியும் இலக்கியமே சிறந்தது. இதனால், இவ்வாறு சிறந்த இலக்கியத்தை ஆக்கியோருக்குப் பெயரும் புகழும் வந்து குவிகிறது.


சமகாலத்தில் சிலர் துளிப் பா (கைக்கூ) தான் சிறந்தது, புதுப் பா (புதுக் கவிதை) தான் சிறந்தது, இலக்கணப் பா (மரபுக் கவிதை) தான் சிறந்தது எனப் பட்டிமன்றம் அல்லது வழக்காடு மன்றம் நடாத்துவார்கள். இதற்கும் ஒரே பதில்; எல்லாப் பாக்களும் (கவிதைகளும்) சமனான தரம் வாய்ந்த இலக்கிய வடிவங்களே! களிப்பூட்ட அல்லது மகிழ்வூட்ட  உதவும் பாக்(கவிதை)கள் மக்களை அல்லது வாசிப்பவரை எளிதாகச் சென்றடைகின்றது.

ஒரு நல்ல படைப்பாளி தன்னைப் படைப்பின் பாத்திரங்களாகக் கருதி தக்க உணர்வை வெளிப்படுத்தத் தெரிந்திருந்தாலும் மக்களை அல்லது வாசிப்பவரைக் களிப்பூட்ட அல்லது மகிழ்வூட்டத் தேவையான அவர்கள் பக்கத்தையும் அறிந்திருக்கவேண்டும். எடுத்துக்காட்டாக காதலியின் விருப்பத்தை காதலன் நிறைவேற்றுவது போல வாசகரின் விருப்பத்தைப் படைப்பாளி நிறைவேற்ற வேண்டும்.

உலகெங்கும் தூய தமிழைப் பரப்பப், பேண முன்வரும் படைப்பாளிகளே! உளவியல் நோக்கில் மேலே கூறிய எல்லாம் நல்லம் தான். உங்கள் படைப்புகளைத் தூய தமிழாக எழுதினால், எவரும் விரும்பமாட்டார்கள். தூய தமிழாக எழுதலாம்; தூய தமிழ் சொல்களுக்கு ஈடான புழக்கத்திலுள்ள பிறமொழிச் சொல்களை அடைப்புக்குள் இட்டு எழுதினால் எவரும் வாசிக்க இலகுவாயிருக்கும். இவ்வாறு தான் இன்றைய இலக்கியங்களில் தூய தமிழை இழையோட வைக்கமுடியும்.

எல்லோரும் உலகெங்கும் தூய தமிழைப் பரப்பப், பேண எழுதுகோல் ஏந்த முன்வாருங்கள். ஒரு படைப்பாளி தன்னையும் வாசகரையும் படித்த பின், வாசகர் மீது தனது எதனையும் திணிக்காமல் வாசகர் விருப்பிற்கேற்ப தனது எண்ணங்களைப் பகிர முன்வரவேண்டும். அப்போது தான் இலக்கியங்களூடாக தூய தமிழைப் பேண முடியும்.

நன்றி: yarlpavanan.tk

Continue reading →

Friday, 22 February 2013

சிறிய மின்னூல் களஞ்சியம்


அன்புள்ள தமிழ் நண்பர்களே!
இலவசத் தமிழ் மின் நூல்களைப் பார்க்க, http://yarlpavanan.wordpress.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/ என்ற பக்கத்தை நாடுக.
இது எனது மின்நூல் களஞ்சியத்தின் தொடக்க நிலையாகும். எதிர்காலத்தில் பல நூறு தமிழ் நூல்களை இங்கு களஞ்சியப்படுத்த எண்ணியுள்ளேன். எல்லா வெற்றிகளும் உங்கள் ஒத்துழைப்புடனேயே இடம் பெறுகிறது. தங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி.
இவ்வண்ணம்
உங்கள் யாழ்பாவாணன்

Continue reading →

Saturday, 16 February 2013

கலியாணப் பேச்சு


தரகர் ஒருவள்: தம்பிக்கு குடிவெறி, சுருட்டுச்சுங்கான் ஏதுமில்லைத் தானே?

காளை ஒருவன்: இல்லையே!

தரகர் ஒருவள்: அப்ப இந்தப் பெண்ணைப் பிடிச்சிருக்கா?

காளை ஒருவன்: பிடிச்சிருக்குத் தான்... ஆனால்?

தரகர் ஒருவள்: அதென்ன... ஆனால்?

காளை ஒருவன்: ஏற்கனவே, இரண்டு பெண்டாட்டிக்கு அடிமை!
                                      மூன்றாவதை முதுகில சுமக்க இயலாதே!

Continue reading →



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog