Saturday, 29 September 2012

தென் தமிழின் பத்துக்கட்டளைகள் - 4


கட்டளை 4

இறைவன் இவன்தான் (இப்படிப்பட்டவன்) எனும் சுய வரம்புகளை ஒழித்து உண்மையான இறைஅனுபவம் கூட அடியார்களோடு சேருங்கள்!

ஏடுநிலத்தில் இடுவதன்முன்னம் வந்து எங்கள் குழாம்புகுந்து
கூடுமனமுடையீர்கள் வரம்பொழி வந்தொல்லைக் கூடுமினோ
நாடுநகரமும் நன்கறி யநமோ நாராய ணாயவென்று
பாடுமனமுடைப் பத்தருள் ளீர்வந்து பல்லாண்டு கூறுமினே.





ஸ்ரீவைஷ்ணவம் இப்பாடலுக்கு விரிவாக அதன் மொழியில் பொருள் சொல்கிறது. அதற்கு முன் எளிமையான பொருளென இப்படிக்கொள்ளலாம். உடல் மண்ணில் சரிவதற்கு முன்னம் இறைவனை ஏற்றித்தொழும் அடியார் கூட்டத்தில் சேர்ந்து, அதற்கு முன்னர் ”இறைவன் இப்படிப்பட்டவன்” என்று நாம் கொண்ட முன்வரைவுகளை முற்றுமாய் ஒழித்து, நாடும் நகரமும் நன்கறிய நமோ நாராயணா! என்று பல்லாண்டு கூறுக! என்பதோர் கட்டளை.

இறைவனைப்பற்றி பல்வேறு கருத்தாங்கள் உள்ளன. அவை மதி விகல்பத்தால் வருவதாக திருவாய்மொழி சொல்கிறது. இருப்பவன் ஒருவன் தான். அவனை நன்கறிய வேண்டுமெனில், இதற்கு முன்னம் நாம் கொண்ட கருத்தாக்கங்களிலிருந்து விடுபட்டு, அதை முற்றுமாக ஒழித்து, நல்ல அடியார்களுடன் சேர்ந்து பரம்பொருளை நன்கு அறிந்து கொள்ளுங்கள் என்பது பட்டர்பிரான் வேண்டுகோள். அவர் பரம்பொருள் நிர்த்தாரணம் செய்தவர் எனவே அவர் இப்படிக் கூவி அழைப்பது சாலப்பொருந்தும்.

ஆனால் விசேஷப்பொருளாக ஸ்ரீவைஷ்ணவர்கள் சொல்வது துறை சேர்ந்தோருக்கு உவப்பாக இருக்கலாம். அதாவது, நமக்கு இருவகையான உடல்கள் உள்ளன. பஞ்சபூதங்களின் (ஸூக்ஷ்ம அவஸ்தைகளாகிய) தந்மாத்ரைகள் ஐந்தும் கருமேந்திரியங்கள் ஐந்தும் ஞானேந்திரியங்கள் ஐந்தும் மநஸ்ஸு (மனது) ஒன்றும் ஆகிய பதினாறு தத்துவங்களுடன் கூடிய சரீரம் ஸூக்ஷ்ம (சூட்சும) சரீரமெனப்படும்; தந்மாத்ரைகளின் ஸ்தூலங்களான பூதங்களூடன் சேர்ந்து அவற்றோடு பஞ்சவிஷயங்களும், ப்ரக்ருதி, மஹாந், அஹங்காரம் - ஆகிய இருபத்தினான்கு தத்துவங்களுடன் கூடிய சரீரம் ஸ்தூலசரீரமெனப்படும்.  (matter & antimatter போல).

உயிர் உடலை விட்டு நீங்கிய பின் சூட்சும சரீரம் கொண்டு இறைவனை அடைய முயல்கிறது. அதுசமயம், ஆன்மநுபூதியை மட்டுமே குறிக்கோளாக கொண்டோர் வாழும் ’கைவல்யம்’ எனும் முக்தி நிலையை வேண்டுவோர் அங்கு சென்று விடுவார்களெனில் மீண்டு வரவியலாது என்பதை மனதில் கொண்டு, ஏடு கைவல்ய நிலத்தில் இடும் முன்னர், பரமபதம் எனும் உலகிற்கு அடியார்களோடு வந்து சேர்ந்து வைகுந்த அநுபூதியை அடையுங்கள் என்று வேண்டுவதாக விசேஷப்பொருள் சொல்கின்றனர்.

கைவல்யம் எனும் தனிமையைத்தவிர்த்து, ‘குள்ளக்குளிர குடைந்து நீராடு’ என்று சொல்கிறார்படி அடியார்களோடு இருந்து இறைவனை வாழ்த்தி அனுபவியுங்கள். அது இகலோகமாக இருந்தாலும், பரலோகமாக இருந்தாலும் கூடி இருத்தலே கோடி நன்மை என்பது வைணவ வழி என்று புரிந்து கொள்ளலாம்.


Related Article:

0 கருத்துரைகள்:



பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog