Thursday, 14 February 2013

வெற்றி வேண்டுமா? போட்டுப்பாரு எதிர்நீச்சல்!


நானும்
நாடு (ஈழத்தில்) சுற்றி வந்தேன்...
நாளுக்கு நாள்
ஆளுக்கு ஆள் காணும்
தோல்விகளைக் கண்டேன்...
இத்தனைக்கும்
சீர்காழி கோவிந்தராஜன் பாடிய
"வெற்றி வேண்டுமா?
போட்டுப்பாரு எதிர்நீச்சல்!" என்ற
பாடல் தான் பதிலாகக் கிட்டியது!
என் மூளை
பின் வேலை செய்ய
எண்ணிப் பார்த்தேன்...
எண்ணியதைச் சொல்ல
சீர்காழியின் பாடல்
நேர்வழி காட்டியதே!
தெருவோர ஆலமரத்தை
மேலும் கீழும் பார்த்தேன்...
வீசுங்காற்றை
எதிர்த்துத் தலைநிமிர்த்த
நிலத்தைக் கிழித்து வேரெறிந்து
விழுதுவிட்டு நிற்பதும்
எதிர்நீச்சலே!
கடலோரம் எளிமையாக(இலேசாக)
கண்ணோட்டம் விட்டேன்...
வீசும் அலையைக் கிழித்து
ஓடத்தைச் செலுத்தும்
ஓட்டியின் செயலும்
எதிர்நீச்சலே!
ஆற்றோரம்
அன்னநடை போட்டேன்...
ஓடும் ஆற்றைக் கிழித்து நீந்தும்
மீன்களின் செயலும்
எதிர்நீச்சலே!
தெருவெளியில்
மோதும் காற்றை கிழித்து
பறவைகளின் இறக்கைகள்
பறப்பது போல மேலாடைகள் பறக்க
வாலைக்(பெண்) குஞ்சுகள்
வியர்த்துக் கொட்ட
மிதிவண்டிகளை மிதித்துச் செல்வதும்
எதிர்நீச்சலே!
ஊனமுற்ற
பக்கத்து வீட்டுப் பெரியவர் கூட
எலும்பும் தோலும் தெரியும்
வாடிச் சுருங்கிய உடலோடு
பூவரசம் தடியைப் பற்றி
ஊரோரத்து
அரச மரத்தடிப் பிள்ளையாரை
சுற்றி வரும் செயலும்
எதிர்நீச்சலே!
வாழ்க்கை என்பது
வழுக்கி விழுத்தும் சேற்றின் மேல்
விழுந்து விடாமல்
நடப்பதென்பார் சிலர்...
சாண் ஏற
முழம் சறுக்கும் வழியாலே
வீண் போகாமல்
வீறுநடை போடவேண்டும்
என்பார் சிலர்...
முடியாது என்பது
மனித அகரமுதலி(அகராதி)யில்
இருக்கக்கூடாதென
முயன்று பார்ப்பதென்பார் சிலர்...
என் பக்கத்தில்
இழப்புகளைக் கண்டேன்
துயர்களைப் பட்டேன்
தனிமையை அடைந்தேன்
எது வந்தும் அச்சமின்றி
இயன்றவரை முயன்றேன்
வாழ்க்கை என்றால்
இப்படித்தான்
ஆயிரமாயிரம் வந்துபோகுமென
நானறிந்தேன்!
நீ... நீ... நீங்கள்
தோல்வியைக் கண்டதும்
வாழ்க்கையே முடிந்ததாய்
எண்ணினால் என்ன பயன்?
உங்களைச் சூழ
எத்தனை எத்தனை எதிர்நீச்சல்
நிகழ்வுகளைப் பார்த்தீர்கள்?
உங்களாலே
எதிர்நீச்சல் போட
இரண்டு கைகளும் போதாதா?
நானொரு வழி சொல்வேன்
தன்னம்பிக்கை இருந்தால்
நன்னம்பிக்கை முனையையும்
கடக்கலாமென்றால் - உனது
மூன்றாம் கையாக
தன்னம்பிக் கையைப் பாவித்தால்
உங்களாலே
எதிர்நீச்சல் போட இயலாதோ?
உங்களாலே
எதிர்நீச்சல் போட
இரண்டு கால்களும் போதாதா?
நானொரு வழி சொல்வேன்
பறக்க வேண்டுமென்று
முடிவு செய்தால்
காற்றே வந்து
சிறகாய் முளைக்குமென்று
பாவலரொருவர்
வெளிப்படுத்தும் நம்பிக்கையை
ஊன்றுகோலாக்கி - அதனை
மூன்றாம் காலாகப் பாவித்தால்
உங்களாலே
எதிர்நீச்சல் போட இயலாதோ?
"நம்பிக்கை என்னும்
நெம்புகோலால் - இந்த
உலகையே
உருட்டி விடாலாம்" என்னும்
நம்ம
பாவலர் வைரமுத்து அவர்களின்
அடிகளில் உள்ள உண்மையை
அறிந்து கொண்டால்
உங்களாலே
எதிர்நீச்சல் போட இயலாதோ?
மீண்டும் மீண்டும்
எதிர்நீச்சல் என்றதும்
"வெற்றி வேண்டுமா?
போட்டுப்பாரு எதிர்நீச்சல்!" என்ற
பாவடிகள் தான்
அடிக்கடி என்னுள்ளத்தில் உருள
அவ்வடிகளை ஆக்கிய பாவலர்
"கண்ணதாசனா?
பட்டுக்கோட்டையாரா?" என்று
என்னுள்ளத்தில்
பட்டிமன்றம் நடக்கிறதே!



Related Article:


பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog