Saturday 23 February 2013

புதிய அவதாரம் "காவிரி தாய்".




முதல்வர் ஜெயலலிதாவின் புதிய அவதாரம் "காவிரி தாய்".அரசிதழில் நீதிமன்றத்தீர்ப்பை வெளியிடச்செய்ததற்காக அம்மாபெரும் சாதனையை செய்து முடித்த பெருமைக்காக இந்த பட்டம் அவரின் ரத்தத்தின் ரத்தங்களால் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வெளியீடு அவ்வளவு பெரிய சாதனையா?என்றால் ஒன்றுமே இல்லை.அரசியல்வாதிகள் தாங்கள் தந்த வாக்குறுதியை நிறைவேற்றுவது எப்படியோ அது போலத்தான்.
எந்த இதழில் வெளியிட்டாலும் கர்நாடக அரசு தண்ணீரை திறந்து விட்டால்தான் உண்டு.உச நீதிமன்றத் தீர் ப்புக்கே தண்ணிரை திறந்து விடாமல் தண்ணிர் காண்பித்த துதான் கர்நாடகா.
இந்த காகித மிரட்டலுக்கு பயந்து விடுமாஎன்ன?
நதிநீர் கண்காணிப்புக்குழு -காவிரி நீர் நிர்வாக வாரியம் இரண்டும் தன்னிச்சையாக உறுதியாக செயல்பட்டால் மட்டுமே இந்த காவிரி தண்ணீர் விவகாரம் ஒரளவுக்கு நிறைவுக்கு வரும்.அதற்கு நதிகளை தேசியவுடமையாக்க வெண்டும்.அதற்காக தனியாரிடம் மத்திய அரசு இப்போது திட்டமிட்டுக்கொண்டிருப்பது போல் ஒப்படைத்து விடக்கூடாது.அது இன்னமும் கலவரத்தை மக்களிடம் தேசிய அளவில் உருவாக்கி விடும்.
இப்போது காவிரி பிரச்னை பற்றியும் தற்போதைய நிலை பற்றியும்  கொஞ்சம் பார்க்கலாம்.
அதை திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விவரிக்கிறார்.
1. முதன் முதலாக காவிரி நடுவர் மன்றம் என்ற ஒன்று அமைத்துத் தீர்வு காண தமிழக அரசு முயற்சி எடுக்கவேண்டும் என்று எம்.ஜி.ஆர். முதல மைச்சராக இருந்த அ.தி. மு.க. அரசு கூட்டிய சர்வ கட்சிக் கூட்டத்தில் (19.2.1980) எடுத்து வைத்தது திராவிடர் கழகமே! (ஆவண ஆதாரம் என்னிடம் உண்டு).
2. காவிரி நீர்ப் பங்கீட்டுக்கு என அமெரிக்கா - கனடா போன்ற நாடுகளில் உள்ள நதி நீர்ப் பங்கீடு குறித்து, அங்குள்ள சுதந்திர நிபுணர்களைக் கொண்ட அமைப்பான டெனசி நதி பள்ளத்தாக்கு ஆணையம் (Tenasy River Valley Authority CVA) போன்ற ஒன்றை நிரந்தர தீர்வுக்காக நிரந்தரமாக அமைக்கவேண்டும் என்று மத்திய அரசினை வற்புறுத்திட வேண்டும் என்ற ஆலோசனையை காவிரி சம்பந்தப்பட்ட அச்சர்வ கட்சிக் கூட்டத்தில் முன்வைத்தது திராவிடர் கழகம்.
3. காவிரி நடுவர் மன்றம் அமைக்க கலைஞர் தலைமை யில் 1989 இல் அமைந்த தி.மு.க. ஆட்சி - அன்றைய பிரதமர் சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் அவர்களிடம் வற்புறுத்தி, அதனைப் பெற்ற பெருமையும் வழங்கிய கொடையும் முறையே தி.முக..வுக்கும், வி.பி. சிங் அவர்களின் தேசிய முன்னணி ஆட்சிக்கும் உரியதாகும்.
4. இந்தியஅரசியல் சட்டத்தின் 262 ஆம் பிரிவின்படி, நதிநீர்ப் பங்கீடு சம்பந்தமாக மாநிலங்களுக்கிடையே ஏற்படும் தாவாவை தீர்த்து வைக்க, நதிநீர் சம்பந்தமாக மாநிலங்களுக்கிடையே ஏற்படும் வழக்குகளைத் தீர்க்கும் சட்டம் (The Inter State Water Disputes Act) 1956 (33 of 1956) என்பதில் உள்ள 11 ஆவது செக்ஷன்படி உச்சநீதிமன்றத்திற்கேகூட நதிநீர்ப் பங்கீடு வழக்குகளை நடுவர் மன்றம் விசாரித்த நிலையில், தீர்ப்புக் கூற அதிகாரம் கிடையாது.
ஆனால், அதன் பிரிவு  4-ன்படி,  மத்திய அரசு அதன் சட்டக் கடமையை நிறைவேற்றிடவேண்டும்என்று ஆணை பிறப்பிக்கும் அதிகாரம் அதற்கு உண்டு.
நடுவர் மன்றத்தின் இடைக்கால தீர்ப்பு
இந்த அடிப்படையிலேயே, கருநாடக அரசு தொடக்க முதலே செய்த அத்தனை சட்டவிரோத அடாவடித்தனங் களையும் தாண்டி, காவிரி நடுவர் நீதிமன்றம் 2007 பிப்ரவரி மாதத்தில் அதன் இறுதித் தீர்ப்பை வழங்கியது.
5. 1990 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி காவிரி நடுவர் மன்றம் அமைந்த பிறகு அடுத்த 1991 ஆம் ஆண்டின் ஜூன் 25 ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு இடைக்காலத் தீர்ப்பாக 205 டி.எம்.சி. தண்ணீரை கருநாடகம் தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டும் என்று நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியது. (இதனைக் கூட இதுவரை கருநாடக அரசு தவறாமல் வழங்கி தமிழக விவசாயிகளின் வாழ்வா தாரத்தைக் காப்பாற்றிட உதவியதா என்றால் இல்லை).
இறுதித் தீர்ப்பு விவரம்
இந்நிலையில், இறுதித் தீர்ப்பு 2007 ஆம் ஆண்டு பிப்ரவரியில் வழங்கியுள் ளதில்,
ஓடிவரும் நீரின் மொத்த அளவு    - 740 டி.எம்.சி.
இதில் தமிழ்நாட்டிற்குரிய பங்கு    - 419 டி.எம்.சி.
கருநாடகத்திற்கு    - 270 டி.எம்.சி.
கேரளாவிற்கு    - 30 டி.எம்.சி.
புதுவைக்கு    - 7 டி.எம்.சி.
சுற்றுச்சூழலை பாதுகாக்க    - 10 டி.எம்.சி.
இந்த இறுதித் தீர்ப்பு வெளியான 6 ஆண்டுகள் கழித்து, அதுவும் உச்சநீதி மன்றம் மத்திய அரசிடம் கேள்வி மேல் கேள்விகளை தலையில் குட்டுவதுபோல் குட்டிக் கேட்ட பிறகே, இறுதி கெடுவுக்கு முதல் நாள் பிப்ரவரி 19 ஆம் தேதி யன்றுதான் வெளியிட்டது என்பது மத்திய அரசுக்குப் பெருமை தருவதல்ல.
இடையில் கருநாடகத்தில் வரவிருக் கும் சட்டமன்றத் தேர்தல் என்ற அரசியல் கண்ணோட்டம் அதன் தவக்கத்திற்குரிய முக்கிய காரணமாக இருந்திருக்கக் கூடும்.
வழமையான மத்திய அரசின் காலந்தாழ்ந்த செயலாக்கத்தின்மூலம், அதற்குரிய முழு நன்றி - பாராட்டைத் தமிழக மக்களிடம் பெற இயலாத நிலை.
சட்டப்படியான நடவடிக்கைக்கே போராட்டமா?
நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை மத்திய அரசு தனது கெசட்டில் வெளி யிடுவது என்பது அரசியல் சட்டப்படி ஆற்றிடவேண்டிய சட்டக் கட்டாயம் ஆகும். அதனைச் செய்ய வைக்கவே வழக்கு, மக்கள் - விவசாயிகள் போராட்டம் தேவை என்பது விசித்திர மானதொன்றாகும்.
6. கெசட்டில் வெளியிடப்பட்ட நிலை யில், இது எனது வெற்றி என்று முதல மைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் பெருமைப்படுகிறார்; அதில் யாருக்கும் சங்கடம் இல்லை. அதேநேரத்தில், தொடக்கம்முதல் இதற்காகக் குரல் கொடுத்தவர்கள், போராடியவர்கள் அனைவரின் பங்கினைப் புறந்தள்ளு வதோ, இருட்டடிப்பதோ சரியல்ல! அதே நேரத்தில், இந்த முக்கிய வாழ்வாதார காவிரி நீர்ப் பிரச்சினையில் முந்தைய எம்.ஜி.ஆர்., கலைஞர் அரசுகள் கூட்டியது போல அனைத்துக் கட்சிக் கூட்டத்தை, அவருடன் தோழமையாக உள்ள கூட்டணிக் கட்சிகள், எதிர்க்கட்சிகள் உள்பட பலரும் கேட்டும் அவர் கூட்ட மறுத்தது இதனால்தானோ என்று எண்ண வேண்டியுள்ளது.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டதாதது ஏன்?
கருநாடகத்தில் ஷெட்டர் அரசு மூச்சுக்காற்றுக்காக வென்டிலேட்டரில் இருக்கும் அரசு என்றாலும்கூட, இது வரை இந்தப் பிரச்சினைக்காக பத்து முறை சர்வகட்சிக் கூட்டங்கள், அனைத் துத் தலைவர்களுடன் பிரதமரை டில்லி சென்று சந்தித்து வற்புறுத்தியது முதலிய பல வகையிலும் நடந்துகொண்ட முறை சுட்டிக்காட்டப்படவேண்டும்.
என்றாலும் அனைத்துத் தமிழ்நாட்டுக் கட்சிகளும்  (தனித்தனியாகவேனும்) குரல் கொடுத்தன; வாதாடின - நாடாளு மன்றத்திலும், வெளியிலும்; எனவே, இது அனைத்துக் கட்சிகளின் வெற்றி என் பதைவிட, தமிழ்நாட்டு மக்கள் அனை வருக்கும் கிடைத்த - காலந்தாழ்ந்த வெற்றியாகும். இதற்குக் காரணமான அத்தனைப் பேருக்கும் இந்த வெற்றியில் உரிமை கொண்டாட பாத்தியதை உண்டு. இப்போதுஅந்த ஆராய்ச்சி முக்கியமல்ல.
அதைவிட  அடுத்த கட்டம்தான் மிக முக்கியமானது.
அடுத்து செய்யப்படவேண்டியது என்ன?
7. இந்த இறுதித் தீர்வுப்படி நிரந்தர மாக காவிரி நீர்ப் பங்கீடு செய்ய இரண்டு முக்கிய அமைப்புகளை அமைக்க வேண்டியது மத்திய அரசின் முக்கிய கடமையாகும்.
1. காவிரி நதிநீர் நிர்வாக வாரியம் இதற்குத் தலைவர், இரண்டு முழு நேர உறுப்பினர்கள், இரண்டு பகுதி நேர உறுப்பினர்கள்,
மத்திய அரசே நியமிக்கவேண்டியது. இதன் தலைவருக்கு குறைந்தது 20 வருட அனுபவமும், தலைமைப் பொறியாளராக இருந்த அனுபவமும் இருக்கவேண்டியது அவசியம். மற்ற இருவரில் ஒருவர் நீர்ப் பாசனத் துறையில் 15 ஆண்டுகள் அனுபவமும், தலைமைப் பொறியாளராக பணியாற்றிய அனுபவமும் அவசியம். இன்னொருவர் விவசாயத் துறையிலிருந்து நியமிக்கப்படுவார்.
அரசிதழில் வெளியிடப்பட்ட அடுத்த 90 நாள்களுக்குள் இந்த அறிவிக்கை நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்குமேல் அதனை முறைப்படுத்த ஒரு கண்காணிப்பு - முறைப்படுத்தும் கமிட்டி ஆகிய ஒன்றும் தேவை.
இவை இரண்டையும் உடனடியாக மத்திய அரசு - முந்தைய காலதாமதம் போல் இன்றி - நியமித்து, இப்பிரச்சி னையை சுதந்திரமாக முடிவு செய்ய அத்தகைய அமைப்புகளின் பொறுப்பில் விட - உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ளவேண்டும்.
முதல்கட்ட வெற்றிதான் - முழு வெற்றியல்ல!
இன்று காலை தமிழ்நாட்டு எம்.பி.,க் கள் பிரதமரிடம் சென்று, நன்றி தெரி வித்து, மேற்கொண்டு அமைப்புகள் அமைக்கக் கேட்டுக்கொண்ட நிலையில், பிரதமர் மன்மோகன்சிங், உடனே அமைப்பதாக உறுதியளித்துள்ளார் என்பது மகிழ்ச்சிக்குரியது - நன்றி!
ஒட்டுமொத்தமான குரலாக தமிழ் நாட்டு மக்கள், கட்சித் தலைவர்கள், எம்.பி.,க்கள் எல்லோரும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தாக வேண்டும்.
இந்த செயல்பாட்டைத் தடுத்து நிறுத் திட கருநாடகம் வரிந்து கட்டிக் கொண் டுள்ளது என்பதைப் பார்க்கையில், நாம் அடைந்துள்ள முதல் கட்ட வெற்றியையே முழு வெற்றிபோல் கருதி, ஏமாந்துவிடக் கூடாது.
2. இந்த இறுதித் தீர்ப்பின் விளைவு களை தெளிவாக விவசாயிகளும், தமிழக மக்களும் புரிந்து கொள்ளத் தவறக் கூடாது!
3. இந்த கெசட் வெளியாவதன்மூலம் ஏற்கெனவே 1892, 1924 ஆகிய ஆண்டு களில் சென்னை ராஜதானிக்கும், மைசூர் அரசுக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந் தங்களே முடிவுக்கு வந்து புதிய நிலை சட்ட ரீதியாகப் பிறக்கிறது.
இதிலிருந்து பலர் கூறிய அபாண்டமும் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. 1924 ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கவில்லை தி.மு.க. அரசு,
எனவே ஒப்பந்தம் முடிந்ததற்கு தி.மு.க.வும், கலைஞரும் காரணம் என்று வெங்கட்ராமன்கள் முதல் இங்குள்ள பலரும் பேசிவந்த புரட்டு உடைந்துவிட்டது!
இனிமேல் கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்திடம் சென்று முறையிட முடியாது.
ஆனா லும், கர் நாடகத்திடம் எளிதில் நியாயம் கிடைக்காது என்பதாலும் நமது கவனம்
 - இரு அமைப்புகளையும் விரைந்து நியமிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் அழுத்தம், வற்புறுத்தலில் இருக்கவேண் டும்.
 இது மிக,மிக முக்கியம். மிகமிக அவசரம்!
-------------------------------------------------------------------------------------------------------------------------------------


Related Article:


பதிவுகளை இணைக்க விரும்புவோர் Admin@tamilcinema4u.in

 

Footer Widget #1

Copyright 2010 www.googlesri.com Tamil News. All rights reserved.
Themes by Bonard Alfin l Home Recording l Distorsi Blog