சிந்தித்து முடிவு செய்யாமலே நாம் பல செயல்களைச் செய்கிறோம். உதாரணமாக, கொதிக்கும் நீரைக் கையால் தொட்டவுடன் கையை எடுத்து விடு கிறோம். அப்போது, கொதிநீரில் விரலை வைத்த செய்தி பெருமூளைக்குச் சென்று அது நரம்புகள் மூலம் கைத்தசைகளை ஏவிவிட்டபிறகுதான் கையை எடுக்கிறோமா? இல்லை. நீரின் வெப்பத்தில் விரல்கள் பட்டவுடன் நரம்புகள் அச்செய்தியை தண்டுவடத்துக்கு அனுப்புகின்றன. தண்டுவடத்தில் இருந்து நரம்புகள் மூலம் கைத்தசைகளுக்குக் கட்டளை போகிறது. உடனே அந்தக் கைத்தசைகள் சுருங்கி கரத்தை நீரில் இருந்து எடுத்துவிடுகின்றன.
அதெல்லாம் சரிதான், ஆனால் நாம் வெப்பத்தால் ஏற்பட்ட வேதனையைப் பற்றிச் சிந்திக்கிறோமே என்று கேட்கலாம். அது உண்மைதான். வெப்பத்தால் விரல் நரம்புகளில் இருந்து கிளம்பிய செய்தி, தண்டுவடத்திலிருந்து பெருமூளைக்குத் தொடர்ந்து செல்கிறது. எனவே வேதனையைப் பெருமூளை பதிவு செய்கிறது. `சுட்ட இடத்தில் மருந்து போட வேண்டுமா?' என்று பெருமூளை சிந்திக்கிறது. ஆனால் கரத்தைக் கொதிநீரில் இருந்து எடுத்த காரியம் பெருமூளையின் உணர்ச்சிக்குக் காத்திருக்கவில்லை. இவ்வாறு பெருமூளையின் முடிவு இல்லாமலே நடைபெறும் செயல்களை `அனிச்சைச் செயல்கள்' என்கிறோம்.
தூங்கும்போது கொசு கடிக்கிறது. உடனே கைகள் கொசுவை அடிக்கின்றன. உறங்கும்போதே இந்தச் செயல் நடைபெறுகிறது. உணர்ச்சி நரம்புகளுக்கும், தண்டுவடத்துக்கும் இணைப்பு ஏற்படுவதால் இத்தகைய அனிச்சைச் செயல்கள் ஏற்படுகின்றன. இதில் மூளைக்குத் தொடர்பில்லை.
உடலின் அனிச்சைச் செயல்களில் பல, உடலுடன் கூடப் பிறந்தவை. அதாவது அவை இயல்பாகவே பயிற்சி இல்லாமல் நிகழ்கின்றன. ஆனால் பயிற்சி மூலம் அனிச்சைச் செயல்களை உடலால் கற்றுக்கொள்ள முடியும்.
மணி அடித்துச் சோறு போடும் பழக்கத்தை நாய்க்கு ஏற்படுத்தி சோறு போட்டால், கொஞ்ச காலத்துக்குப் பிறகு மணி அடிக்கும்போதே நாய்க்கு இரைப்பை நீர் ஊறும் என்பதை பாவ்லோவ் என்ற விஞ்ஞானி நிரூபித்துக் காட்டினார். பத்துத் தடவை மணி அடித்தால் சோறு கிடைக்கும் என்பது பழக்கமாகிவிட்டால் ஒன்பது தடவை மணி அடித்தால் இரைப்பை நீர் ஊறாமல் பத்து தடவை அடித்தால்தான் அது ஊறுவதையும் அவர் பரிசோதனைகள் மூலம் நிரூபித்தார். இந்த வகையான அனிச்சைச் செயல்களை `சூழல் சார்ந்த அனிச்சைச் செயல்' என்றார் பாவ்லோவ்.
0 கருத்துரைகள்:
Post a Comment